பெங்களூர், ஜூன் 17 – ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் லெக்ஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய லெக்ஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் தொடர்பான வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து முடித்த பிறகுதான், சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும். அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மே 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஜூன் 6-ஆம் தேதி வரை தடை விதித்தனர்.
மேலும், சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான சிவில் வழக்குகள் விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு ஜூன் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் தன்னையும் சேர்க்க உத்தரவிடக் கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வரும் 13-ஆம் தேதிக்குள் ஜெயலலிதா மற்றும் தமிழக ஊழல் தடுப்பு பிரிவு பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.