ஈராக், ஜூன் 19 – ஈராக் அரசுக்கு சொந்தமான முக்கிய எண்ணெய் ஆலையை தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டனர். அங்கு நடந்த கடும் சண்டையில் பலத்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் வளமிக்க ஈராக் நாட்டில், வடக்குப் பகுதியில் முக்கிய நகரங்கள் பலவற்றையும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் தங்கள் வசப்படுத்தி விட்டனர்.
தலைநகர் பாக்தாத் நோக்கி அவர்கள் முன்னேறிச் செல்கின்றனர். ஈராக் முழுவதும் போர்ப்பதற்றம் நீடிக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் பிழைப்பதற்காக தங்கள் இருப்பிடங்களை காலி செய்து விட்டு ஓட்டம் பிடித்து வருகின்றனர்.
ஈராக் அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (நார்த் எண்ணெய் கம்பெனி), தலைநகர் பாக்தாத்தில் இருந்து 210 கி.மீ. வடக்கே, சலாஹெதீன் மாகாணத்தில், பாய்ஜி என்ற இடத்தில் செயல்பட்டு வந்தது.
நாட்டின் வடக்கு பகுதியில் பெரும்பாலான நகரங்களை கைப்பற்றிவிட்ட நிலையில், இங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்ப்பில் ஆலை நேற்று முன்தினம் மூடப்பட்டது. அதில் இருந்த பணியாளர்கள் பெரும்பாலோர் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மலேசிய நேரப்படி 3.00 மணிக்கு இந்த ஆலை வளாகத்திற்குள் தீவிரவாதிகள் அதிரடியாக நுழைந்தார்கள். அவர்கள் ஒரு முனையில் இருந்து பீரங்கித்தாக்குதல் நடத்தினர். மற்றொரு முனையில் இருந்து எந்திரத் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
பாதுகாப்பு படையினர் திருப்பித்தாக்கினர். இரு தரப்பிலும் பயங்கர சண்டை நடந்தது. இதில் எண்ணெய்ப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்புக் கிடங்குகள் தீப்பிடித்து எரிந்தன. அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறியது.
சண்டை உச்சக்கட்டம் அடைந்தபோது, தீவிரவாதிகள் ஆலையின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவுகளை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர்.
ஆலையின் நிர்வாகக் கட்டிடமும் தீவிரவாதிகள் வசம் வந்து விட்டது. 4 கண்காணிப்பு கோபுரங்களையும் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதன்மூலம் ஆலையின் முக்கால் பங்கு பகுதி தீவிரவாதிகள் வசம் வந்து விட்டது.
ஈராக்கில் உள்நாட்டுப் போர் தீவிரமாகி வருவதை உலக எண்ணெய் உற்பத்தியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். ஈராக்கில் இருந்து தற்போது நாள் ஒன்றுக்கு 25 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதியாகி வருகிறது.
தீவிரவாதிகளின் கை ஓங்கி வந்தாலும்கூட, கச்சா எண்ணெய் கிணறுகள் இப்போதைக்கு பாதுகாப்பாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஈராக்கைப் பொருத்தவரை, எண்ணெய் உற்பத்தி செய்கிற கட்டுமானங்கள் பலவும் நாட்டின் தென்பகுதியில் இருப்பதால், அவை இப்போதைக்கு பாதிப்பின்றி இருப்பதாக அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
ஈராக்கில் தீவிரவாதிகள் கை ஓங்கி, ராணுவம் பலவீனமாகி இருப்பது பிரதமர் நூரி அல் மாலிக்கிக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது. ராணுவத்தின் முன்னணி தளபதிகள் பலரை அவர் அதிரடியாக பதவியில் இருந்து அகற்றி உத்தரவிட்டார்.