பாங்காக், ஜூன் 20 – ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகின்றது. அங்கு பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாததால் வறுமையில் வாடுகின்றனர்.
சமீபகாலமாக அங்கு நிலமை மிகவும் மோசமடைந்து விட்டது. அதனால் உணவிற்காகவும், வேலை வாய்ப்புகளுக்காகவும் மக்கள் கூட்டம் கூட்டமாக அண்டை நாடான தாய்லாந்துக்கு செல்கிறார்கள்.
விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் எல்லையை தாண்டி தாய்லாந்துக்கு சென்றபடி இருக்கிறார்கள். தினமும் 10 ஆயிரம் பேர் வரை தாய்லாந்துக்கு சென்று வருவதாக தெரியவந்துள்ளது.
இதுவரை 2 லட்சம் பேர் தாய்லாந்துக்கு சென்றுள்ளார்கள். இதனால் தாய்லாந்தில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. கம்போடியாவில் இருந்து வரும் தொழிலாளர்களை தடுக்க பல்வேறு முன்னேற்பாடுகளை தாய்லாந்து அரசு செய்து வருகின்றது.
பொருளாதாரத்தில் தளர்ந்து போன கம்போடிய அரசு நிவாரணங்களுக்காக உலக நாடுகளை எதிர்நோக்கி உள்ளது.