ஜூன் 20 – சுவிட்சர்லாந்து வங்கிகளில் சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப்பணம் ரூ.14 ஆயிரம் கோடியைத் (மலேசிய ரிங்கிட் 77,35,000,00) தாண்டியுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
2013-ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் பணம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கி ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.
அதே நேரத்தில் உலக அளவில் சுவிஸ் வங்கிகளில் பணம் போடுவது என்பது குறைந்து வருகிறது. ஆனால் இந்தியர்கள் பணம் போடுவது என்பது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை மீட்க நரேந்திர மோடிதலைமையிலான அரசு சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள் முதலீடு செய்துள்ள தொகையைக் குறிப்பிட்டுள்ள சுவிஸ் வங்கி ஆணையம் அவர்களது பெயர்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டது. சுவிட்சர்லாந்து நாட்டில் 300 ஆக இருந்த தேசிய வங்கிகளின் எண்ணிக்கை 283 ஆகக் குறைந்துள்ளது.
இரண்டு பெரிய வங்கிகள் மூடப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் 1.25 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஊழல் மூலம் சம்பாதிக்கும் பணத்தை இந்திய அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வருகின்றனர். இதனை சட்டப்பூர்வமாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மந்த நிலையிலேயே உள்ளன.