வாஷிங்டன், ஜூன் – ஈராக்கிற்கு 300 ராணுவ ஆலோசகர்களை அமெரிக்கா அனுப்புகிறது என்று அமெரிக்கா பிரதமர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அரசு படைகளை எதிர்த்து தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.
மொசூல், திக்ரித், சாதியா, ஜலாலா, தல் அபார் நகரங்களைப் தீவிரவாதிகள் பிடித்து விட்டனர். தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வரும் அவர்கள் பாய்ஜியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை முழுமையாகக் கைப்பற்ற முழுவீச்சில் சண்டையிட்டு வருகின்றனர்.
உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தீவிரவாதிகள்மீது வான்வழி தாக்குதல் நடத்துமாறு அமெரிக்காவின் உதவியை ஈராக் நேற்று முறைப்படி நாடியது. இதை அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிரமாக பரிசீலித்தார்.
இதனையடுத்து முதல்கட்டமாக ஈராக்கிற்கு 300 ராணுவ ஆலோசகர்களை அமெரிக்கா அனுப்பும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையை அறிந்து, இலக்கு மற்றும் துல்லியமான ராணுவ நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராகி வருகிறோம் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.