சென்னை, ஜூன் 20 – எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பெற்றார். ஆனால் அந்த பொறுப்பை அவர் சரிவர செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியும் சேர்ந்து கொள்ள சரிந்த செல்வாக்கை தூக்கி நிறுத்தும் நிர்ப்பந்தம் விஜயகாந்துக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதனால், அடுத்த மாதம் 10-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட வேண்டும் என விரும்பியுள்ளார்.
இதுகுறித்து கட்சி வட்டாரங்களில் கூறியதாவது, விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் மலேசியாவில் இருந்து சென்னை திரும்புகிறார். அதன்பின் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறப்பது குறித்து தான் கருத்து கேட்கவிருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.