லண்டன், ஜூன் 21 – சீனா மற்றும் பிரிட்டன் இடையே நேரடி பணப் பரிமாற்றம் செய்யும் வசதி, கடந்த வியாழக் கிழமை முதல் தொடங்கியது.
சீனா தனது அந்நியச் செலவாணியை அதிகரிக்கும் நோக்கத்துடனும், அயல்நாட்டு வர்த்தகத்தை சர்வதேச அளவில் விரிவாக்கவும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தற்போது பலன் அளிக்க தொடங்கியுள்ளன.
அமெரிக்காவுடன் நேரடி பணப் பரிமாற்றத்தினைக் கொண்டிருக்கும் சீனா, தனது நாணய மதிப்பான யுவானை, பிரிட்டன் பவுண்ட் ஆக மாற்றுவதற்கு அமெரிக்க டாலரை பயன்படுத்தி வந்தது. ஆனால் தற்போது சீனா மற்றும் பிரிட்டன் இடையே நேரடி பணப் பரிமாற்றம் துவங்கியுள்ளது, சீனாவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் சிறப்பான அங்கிகாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் சீன பிரதமர் லீ கெகியாங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றார். திபெத் விவகாரத்தில் சீர்குலைந்து இருந்த இரு நாடுகளின் உறவினை சரி செய்யும் நோக்கத்துடன் பிரிட்டன் சென்ற அவர், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுடன் இரு நாடுகளின் உறவு மற்றும் வர்த்தகம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். அதன் முயற்சியாகவே தற்போது சீனா மற்றும் பிரிட்டன் இடையே நேரடி நாணயப் பரிமாற்றம் தொடங்கியதாக கூறப்படுகின்றது.
இது குறித்து பிரிட்டன் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பார்ன் கூறுகையில், “சீனா உடனான இந்த நேரடி பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதி, வரும் வருடங்களில் சர்வதேச அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம்” என்று கூறியுள்ளார்.
சீனா தனது நாணய மதிப்பினை சர்வதேச அளவில் கொண்டும் செல்லும் முயற்சியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக வட்டி விகிதத்தை தாராளமயமாக்க முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.