Home நாடு மஇகா சார்பாக இரண்டு செனட்டர்கள் – விக்னேஸ்வரன், (பகாங்) குணசேகரன் – நியமனம்

மஇகா சார்பாக இரண்டு செனட்டர்கள் – விக்னேஸ்வரன், (பகாங்) குணசேகரன் – நியமனம்

773
0
SHARE
Ad

MIC-Logo-Sliderகோலாலம்பூர், ஜூன் 21 – பல தருணங்களில் ஆரூடங்கள் கூறப்பட்டபடி ம.இ.காவுக்கு மூன்று செனட்டர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்றும் தற்போது இரண்டு செனட்டர் பதவிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்துள்ள வேளையில்,

அந்த இரண்டு செனட் பதவிகளையும், பகாங் மாநில மஇகா தலைவர் டத்தோ குணசேகரனும், முன்னாள் ம.இ.கா தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவர்கள் இருவரும் எதிர்வரும் திங்கட்கிழமை ஜூன் 23ஆம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதற்கு முன் வெளிவந்த பத்திரிக்கைத் தகவல்களின்படி ம.இ.கா சார்பில் காலியாகவுள்ள மூன்று செனட்டர் பதவிகளுக்கான பெயர்களை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பிரதமரின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ சோதிநாதன், முன்னாள் தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், பேராக் மாநிலத் தலைவர் டத்தோ ஆர்.கணேசன் ஆகிய மூவருக்கும் அந்த செனட்டர் பதவிகளுக்காக பழனிவேல் பிரதமரிடம் சிபாரிசு செய்திருக்கின்றார் என்றும் கூறப்பட்டது.

எனினும் திடீர் திருப்பமாக இப்போது இரண்டு செனட்டர் பதவிகள் மட்டுமே ம.இ.காவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது எனத் தெரிகின்றது.

அந்த இரண்டு செனட்டர் பதவிகளுக்கும் விக்னேஸ்வரனுக்கும், பகாங் மாநில ம.இ.கா தலைவர் டத்தோ குணசேகரனுக்கும் நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டுவிட்டதாகவும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

மூன்றாவது செனட்டர் பதவி என்னவாயிற்று?

ம.இ.காவின் மூன்றாவது செனட்டர் பதவிக்கு S.A.Vigneswaran.ஏன் ஒருவரும் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

மஇகா வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களின்படி மஇகாவிற்கு நியாயப்படியும் உரிமைப்படியும் நான்கு செனட்டர் பதவிகள் கிடைக்க வேண்டும்.

முதலாவது செனட்டர் பதவி பினாங்கு மாநில மஇகா தலைவர் டத்தோ சுப்பையா கடந்த ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு காலமானதால் காலியான செனட்டர் பதவியாகும். அது கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாகவே இருந்து வந்தது.

இரண்டாவது செனட்டர் பதவி தாப்பா தொகுதி மஇகா தலைவர் டத்தோ டாக்டர் மாலசிங்கம் வகித்து வந்த செனட்டர் பதவியாகும். அவரது செனட்டர் பதவிக் காலம் கடந்தாண்டு நிறைவுக்கு வந்தது. இருப்பினும், கடந்த ஓராண்டாக அந்த செனட்டர் பதவியும் நிரப்பப்படாமல் இருந்து வந்தது.

மூன்றாவது செனட்டர் பதவி மஇகா தேசியத் தலைவர் பழனிவேல் வகித்து வந்த செனட்டர் பதவியாகும். கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலையில் போட்டியிடுவதற்காக தனது செனட்டர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அந்த செனட்டர் பதவியும் இதுவரை கடந்த ஓராண்டாக நிரப்பப்படாமல் இருந்து வந்தது.

சட்டமன்றத்தை விட்டுக் கொடுத்ததால் கிடைக்க வேண்டிய செனட்டர் எங்கே?

இதற்கிடையில், கடந்த பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் மஇகாவிற்கு பாரம்பரியமாக ஒதுக்கப்பட்டு வந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றை அம்னோவுக்கு ஆதரவாக பழனிவேல் விட்டுக் கொடுத்தார்.

அப்போது அவரின் இந்த முடிவுக்காக கடும் கண்டனங்கள் மஇகாவிலும் இந்திய சமுதாயத்திலும் எழுந்த போது, விட்டுக் கொடுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு பதிலாக   மஇகாவிற்கு கூடுதலாக ஒரு செனட்டர் பதவி வழங்க பிரதமர் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று பழனிவேல் பகிரங்கமாகவே அறிவித்தார்.

ஆனால், ஓராண்டாகியும் இதுவரை அந்த செனட்டர் பதவி மஇகாவிற்கு வழங்கப்படவில்லை.

இத்தகைய சூழலில் மஇகாவிற்கு நியாயப்படியும் உரிமைப்படியும் கிடைக்க வேண்டிய இரண்டு செனட்டர் பதவிகளை அந்தக் கட்சி இழந்துள்ளது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாகும்.