பினாங்கு, ஜூன் 21 – மஇகா சார்பிலான இரண்டு செனட்டர்களாக டத்தோ விக்னேஸ்வரனும் டத்தோ குணசேகரனும் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து பினாங்கு மஇகாவில் அதிருப்தி அலைகளும் எதிர்ப்பு குமுறல்களும் பரவத் தொடங்கியுள்ளன.
காரணம், காலியாக இருந்த செனட்டர் பதவிகளில் ஒன்றை பினாங்கு மாநிலத்தின் முன்னாள் மஇகா தலைவர் காலஞ்சென்ற டத்தோ சுப்பையா வகித்து வந்தார்.
பழனிவேல் தேசியத் தலைவராக பதவியேற்ற பின் வழங்கிய முதல் பதவிகளில் சுப்பையாவிற்கு வழங்கிய செனட்டர் பதவியும் ஒன்றாகும். நீண்டகாலமாக சுப்பையா பழனிவேலுவின் நெருக்கமான ஆதரவாளராக இருந்து வந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஆனால், செனட்டர் பதவியேற்ற சில மாதங்களுக்கு பின்பு கடந்த ஏப்ரல் 2012-ஆம் ஆண்டு செனட்டர் சுப்பையா காலமானார். அதைத் தொடர்ந்து அந்த செனட்டர் பதவி பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பினாங்கு மாநில மஇகாவில் நிலவி வந்தது.
13வது பொதுத் தேர்தலில் ம.இ.கா தோல்வி
இதற்கிடையில், மே 2013 – இல் நடைபெற்ற 13ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவுக்கு ஒதுக்கப்பட்ட 2 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்த வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.
எதிர்க்கட்சிகளின் வசமாகிவிட்ட பினாங்கு மாநிலத்தில் அரசியல் ரீதியாக செயல் நடவடிக்கைகள் மேற்கொள்ள பினாங்கு மாநிலத்திலுள்ள ஒரு மஇகா தலைவருக்கு செனட்டர் பதவி வழங்கப்பட்டால் அதன்மூலம் இந்தியர் வாக்குகளை தேசிய முன்னணிக்கு ஆதரவாக திசை திருப்ப முடிந்திருக்கும்.
டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம்
நடப்பு மாநிலத் தலைவர் கருப்பண்ணன் அல்லது நடப்பு மாநில பொருளாளரும் மஇகா பாகான் டாலாம் தொகுதித் தலைவரும் மத்திய செயற்குழு உறுப்பினருமான டத்தோ ஹென்ரி பெனடிக் ஆசிர்வாதம் ஆகிய இருவரில் ஒருவருக்கு சுப்பையாவிற்கு பதிலாக அந்த செனட்டர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஓராண்டாக நிலவி வந்தது.
காலமான சுப்பையாவின் செனட்டர் பதவி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏன் இதுவரை நிரப்பப்படவில்லை என எழுந்துள்ள கேள்வி ஒருபுறம் இருக்க,
இப்பொழுது அந்த செனட்டர் பதவியும் பினாங்கு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டு விட்டது.
தேசிய முன்னணி ஆளும் பகாங் மாநிலத்திற்கு ஏன் செனட்டர் பதவி?
குறிப்பாக, பகாங் மாநிலத் தலைவரான டத்தோ குணசேகரன் ஏற்கெனவே கடந்த பொதுத் தேர்தலில் பகாங் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத்தில் போட்டியிட்டு தோல்வி கண்டவராவார்.
பகாங் மாநிலம் தேசிய முன்னணிக்கு சாதகமான உறுதியான மாநிலமாகும். பிரதமர் நஜிப் துன் ரசாக்கே இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் பகாங் மாநிலத்தில் உள்ள இந்தியர் பிரச்சினைகளை கவனிப்பதிலும், அவற்றை தேசிய முன்னணியின் தலைமைத்துவத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதிலும் எந்த சிக்கலும் இல்லை.
இந்நிலையில், எந்த அரசியல் லாபமும் இல்லாத சூழ்நிலையில் பகாங் மாநிலத்திற்கு ஏன் பினாங்கிற்கு வரவேண்டிய செனட்டர் பதவி கொடுக்கப்பட்டிருக்கின்றது என்ற குமுறல்கள் பினாங்கு மஇகாவில் வெடிக்கத் தொடக்கியிருக்கிறது.
ஆனால், பினாங்கு மாநில அரசியல் நிலவரப்படி பார்த்தால் அங்கு எவரேனும் ஒரு மஇகா தலைவருக்கு செனட்டர் பதவி வழங்கியிருந்தால் அதன்மூலம் பினாங்கு மஇகாவையும் தேசிய முன்னணிக்கு ஆதரவாக இந்தியர்களின் வாக்குகளையும் பலப்படுத்தியிருக்க முடியும்.
“செனட்டர் பதவி தருவதாக பழனிவேல் வாக்களித்தார்” – ஹென்ரி
கடந்த 13ஆவது பொதுத்தேர்தலில் பாகான் டாலம் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட கருப்பண்ணனுக்கு தான் விட்டுக் கொடுத்து ஆதரவு வழங்கியதாகவும், அதற்கு பதிலாக தேசியத் தலைவர் பழனிவேல் தனக்கு செனட் பதவியை வழங்குவேன் என்று உறுதியளித்ததாகவும் மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ ஹென்றி ஏற்கெனவே பகிரங்கமாக அறிக்கை விடுத்திருந்தார்.
ஹென்ரி தலைவராகப் பதவி வகிக்கும் பாகான் தொகுதியின் கீழ்தான் பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதி இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சூழ்நிலையில், பினாங்கு மாநில மஇகாவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட செனட்டர் பதவி கிடைக்காத காரணத்தால் பினாங்கு மாநில தொகுதித் தலைவர்களிடையே பரவலான அதிருப்தியும் தேசியத் தலைவருக்கு எதிரான கண்டனங்களும் பரவி வருவதாக பினாங்கு மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடம் இறுதிக்குள்ளாக இனி அடுத்தடுத்து மூன்று செனட்டர் பதவிகள் காலியாகவுள்ளன.
அதில் ஒன்றாவது பினாங்கு மாநிலத்திற்கு ஒதுக்கப்படுமா அல்லது மீண்டும் அந்த மாநிலம் ம.இ.கா தலைமைத்துவத்தால் புறக்கணிக்கப்படுமா என்பதுதான் பினாங்கு மாநில ம.இ.காவினரிடையே தற்போது கேட்கப்பட்டு வரும் கேள்வியாகும்.