காபூல், ஜூன் 23 – ஆப்கானிஸ்தானுக்காக இந்தியா உருவாக்கி வரும் நாடாளுமன்றக் கட்டடம், அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று இந்திய அரசின் மத்திய பொதுப்பணித் துறையைச் சேர்ந்த திட்ட மேலாளர் ஜி.எஸ்.பந்த் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது, “ஆப்கனில் நடைபெறும் கட்டுமானப் பணி 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முகலாயர்கள் கால கட்டட அமைப்பும் மற்றும் நவீன கட்டட அமைப்பும் சேர்ந்த கலவையாக இக்கட்டடம் உருவாகிவருகின்றது.”
“ஆசியாவிலேயே மிகப்பெரியதாக, இந்த நாடாளுமன்ற மாடத்தின் மேற்கூரை இருக்கும். இங்கு பயன்படுத்தப்படும் வெள்ளை பளிங்குக் கற்கள், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மக்ரானாவில் இருந்தும் கொண்டுவரப்பட்டுள்ளன.”
“இதர கட்டுமானப் பொருள்கள் மற்றும் மரச்சாமான்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் 400-500 பணியாளர்களில் சுமார் 150 பேர் இந்தியர்கள். மொத்தத்தில் ரூ.710 கோடி செலவில் இந்த நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றது.”
“ஒட்டுமொத்தமாக கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள்ளாக ஆப்கன் அரசிடம் இந்த நாடாளுமன்றக் கட்டடம் ஒப்படைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.