Home நாடு சுல்தான்கள் வணிக பங்கேற்பில் இருந்து விலகியிருக்க வேண்டும் – துன் மகாதீர் கருத்து

சுல்தான்கள் வணிக பங்கேற்பில் இருந்து விலகியிருக்க வேண்டும் – துன் மகாதீர் கருத்து

437
0
SHARE
Ad

mahathir-forehead1கோலாலம்பூர், ஜூன் 23 – நமது நாட்டில் மாநில சுல்தான்களின் ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும் சட்ட ரீதியான கட்டுப்பாடுகளை தனது பதவி காலத்தில் கொண்டு வந்த துன் மகாதீர், சுல்தான்கள் வணிக முயற்சிகளிலும், ஒப்பந்தங்களிலும் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் சுல்தான்களுக்கு சாதகமான வாய்ப்புகள் வழங்கப்படக் கூடும் என்றும் சில தரப்புகள் இதனை பயன்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்ள முயற்சிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுல்தான்கள் நேரடி வணிகங்களில் ஈடுபடுவதன் மூலம் தங்களுக்குரிய பங்கினையும் அதிகாரத்தையும் மீறி செயல்படுகின்றனர் என்று சுட்டிக் காட்டிய மகாதீர் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறும் போது மக்கள் தயக்கமின்றி எதிர்ப்புக்குரல் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சுல்தான்களின் இந்த நடவடிக்கைகள் நாட்டிற்கு பாதிப்பைக் கொண்டு வரும் என்பதால் இவற்றிற்கு எதிராக நாம் பேச வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.

“நாம் அரசியல் சாசனப்படியும் சட்டப்படியும் மாநில சுல்தான்களுக்கு ஆளும் அதிகாரத்தை அளித்திருக்கின்றோம். ஆனால், அதிகாரத்திற்கு மீறிய செயல்களில் அவர்கள் இறங்கக் கூடாது. அப்படி ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நாம் பேசாமல் இருக்கக்கூடாது. சுல்தான்கள் வர்த்தகர்களாக உருமாறி, திட்டங்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினால் அதனால் பிரச்சினைகள்தான் எழும். காரணம் அவர்கள் அதிகமாக மதிக்கப்படுபவர்கள். அவர்களை சுலபமாக மறுத்துவிட முடியாது. இவர்களோடு போட்டிப்போட தயங்கி மற்ற வர்த்தகர்கள் ஒதுங்கிக் கொள்ளக்கூடும்” என்று தெரிவித்த மகாதீர்,

“எனவே, இதனால் பாதிப்புகள்தான் நாட்டிற்கு ஏற்படும். இதுபோன்ற கருத்துகள் சொல்வது எனக்கு சங்கடமான நிலைமை ஆகும். சுல்தான்களுக்கு அவர்கள் நம்மை ஆள்பவர்கள் என்ற அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறோம். அவர்களை நான் தனிப்பட்ட முறையில் மதிக்கின்றேன். ஆனால், இந்தப் பழக்கம் (சுல்தான்கள் வணிகத்தில் ஈடுபடுவது) நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் சில வர்த்தகர்கள் தங்களது சுய நலத்திற்காக சுல்தான்களை பயன்படுத்திக் கொள்ளும் போக்கு தொடரும்” என்றும்  வலியுறுத்தியுள்ளார்.

‘தெ மோல்’ (The Mole) என்ற இணைய செய்தித் தளத்திற்கு எழுதியுள்ள கட்டுரையொன்றில் மகாதீர் மேற்கண்ட விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

மாநில நிர்வாகத்திலும் தலையிடக் கூடாது

“அதே போன்று, சுல்தான்கள் மாநிலத்தின் நிர்வாக அதிகாரங்களிலும் தலையிடக் கூடாது. வரையறுக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் நியதிகளின்படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தை அவர்கள் மதிக்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு நாள் மலாய் சுல்தான்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அதே அரசியல் சாசனத்தை மக்களும் புறக்கணித்து விடுவார்கள்” என்றும் மகாதீர் தனது கட்டுரையில் எச்சரித்துள்ளார்.

நமது சுல்தான்களுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் அதேவேளையில் அவர்கள் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்ட நிலையில் அவர்களின் நடவடிக்கைகள் இருப்பதையும் நாம் உறுதிசெய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.