புத்ரா ஜெயா, ஜூன் 23 – சரவாக் மாநில சட்டமன்றத்தின் 5 ஆண்டு கால பதவிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளதால், புக்கிட் அசேக் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான பதவிக்காலம் எஞ்சி இருக்கும் பட்சத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் யாராவது மரணமடைந்தால், அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லையென மலேசிய அரசியல் சட்டம் பிரிவு 54 (1) கூறுகின்றது.
எனவே, கடந்த சனிக்கிழமை மூளை புற்றுநோயால் காலமான புக்கிட் அசேக் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹோ லெங்கின்(படம்) தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஸீஸ் கூறுகையில், “சரவாக் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 2016 -ம் ஆண்டு ஜூன் 20 -ம் தேதியுடன் நிறைவடைகின்றது. எனினும், அதற்கு முன்னதாகவே மாநில தேர்தலை அறிவிக்க அம்மாநில முதலமைச்சருக்கு அதிகாரம் உள்ளது” என்று தெரிவித்தார்.
சரவாக் மாநில ஜசெக தலைவரான வோங், கடந்த 2011 -ம் ஆண்டு நடைபெற்ற சரவாக் மாநில தேர்தலில், தேசிய முன்னணி வேட்பாளர் சியெங் ஹுவாங் டூன் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஹை தியாங் ஹுவாட் ஆகியோரை 8,827 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.