இஸ்லாமாபாத், ஜூன் 24 – பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீதான வெளிநாட்டு பயணத் தடை நீடிக்கும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேசத்துரோக குற்றச்சாட்டு மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சிந்து மாகாண உயர்நீதிமன்றம் சமீபத்தில் நீக்கி தீர்ப்பளித்தது. அதேசமயம், உச்ச நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யாவிட்டால் முஷரப் வெளிநாடு செல்லலாம் என்றும் தெரிவித்து இருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அரசின் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்த அந்த மனுவில், வெளிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் முஷரப் பெயர் நீடிக்க வேண்டும் என்றும், அவரை வெளிநாடு செல்ல அனுமதித்தால் தேசத்துரோக வழக்கு விசாரணைக்காக மீண்டும் நாட்டிற்கு திரும்பி வரமாட்டார் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவினை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணை முடிந்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சிந்து மாகாண உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தனர். இது முஷரப்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.