புதுடெல்லி, ஜூன் 24 – இயற்கை எரிவாயு விலையை உயர்த்துவது குறித்து பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இது குறித்து மத்திய அரசு அதிகார வட்டாரங்கள் கூறுகையில்,
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடுகளை ஊக்குவிக்க இயற்கை எரிவாயுவுக்கு வழங்கப்படும் விலையை மறுபரிசீலனை செய்வது என ஒப்புக்கொள்ளப்பட்டது.
இயற்கை எரிவாயுவுக்கு ஒரு மில்லியன் பிரிட்டீஷ் தெர்மல் யூனிட்டுக்கு தற்போது வழங்கப்படும் 4.2 டாலர்களை 8.4 டாலர்களாக உயர்த்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்தது.
அதனடிப்படையில் விலையை அதிகரிக்க புதிய அரசு ஆர்வம் காட்டுகிறது. எனவே விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்படலாம் என்று தெரிவித்தன.
இது குறித்து எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கையில், “இயற்கை எரிவாயுவுக்கு ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு தற்போது 4.2 அமெரிக்க டாலர் வழங்கப்படுகிறது.
இந்த தொகையை வைத்துக் கொண்டு கடலுக்கடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வயல்களில் இருந்து உற்பத்தி மேற்கொள்ள முடியாது.
அதே சமயம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டபடி இயற்கை எரிவாயு விலை தொடர்பான புதிய திட்டத்தை செயல்படுத்தினால் மின்சாரம், யூரியா, சமையல் எரிவாயு மற்றும் சி.எஸ்.ஜி. ஆகியவற்றின் விலை அதிகரிக்கும்.
ஏற்கனவே பணவீக்கமும், விலைவாசியும் அதிகரித்து காணப்படுகிது. இந்த நிலையில் இயற்கை எரிவாயு விலையை உயர்த்தினால் பணவீக்கம் மற்றும் விலைவாசி மேலும் அதிகரித்து விடும் என புதிய அரசு கருதுகிறது” என்று தெரிவித்தார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து உள்நாட்டு எரிவாயுவுக்கும் விலையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அதிகரிப்பது என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் புதிய விலை தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இதனிடையே உள்நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துடன் விலை தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதனால் வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் புதிய விலை தொடர்பான முடிவு செயல்படுத்தப்படும் என ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் ஏப்ரல் 21ம் தேதி தெரிவித்தது.
ஏற்கனவே புதிய விலை தொடர்பான முடிவை செயல்படுத்தாத காரணத்தால் மத்திய அரசுக்கு ரிலையன்ஸ் நிறுவனமும் அதன் கூட்டு நிறுவனமுமான பி.பி.யும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆதலால் ஜூலை 1ம் தேதிக்குள் இயற்கை எரிவாயு விலையை அதிகரிக்க மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது.