Home உலகம் ரஷ்யா மீது கனடா கடும் தாக்கு – 11 ரஷ்யர்கள் மீது கூடுதல் பொருளாதாரத் தடை! 

ரஷ்யா மீது கனடா கடும் தாக்கு – 11 ரஷ்யர்கள் மீது கூடுதல் பொருளாதாரத் தடை! 

644
0
SHARE
Ad

canada_russiaஒட்டாவா, ஜூன் 24 – உக்ரைனின் இறையாண்மையையும், வட்டார ஒருமைப்பாட்டையும் மீறுவதற்கு வழி வகுத்ததாக 11 ரஷ்யர்கள் மற்றும் உக்ரைனியர்கள், கிரீமியாவைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் மீது கனடா கூடுதல் பொருளாதாரத் தடை மற்றும் சுற்றுலாத் தடையை விதித்துள்ளது.

இது குறித்து கனடா பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ரஷ்யா சட்டத்துக்குப் புறம்பாக உக்ரைனின் கிரீமியா பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதுடன், தொடர்ந்து அந்நாட்டிற்கு இடையூறு செய்யும் வகையில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ரஷ்யாவின் இத்தகைய செயல் சர்வதேச சமுதாயத்தைக் கவலை அடையச் செய்துள்ளது.”

“ரஷ்யர்கள் மற்றும் உக்ரைனியர்களுக்கு எதிராக தனிப்பட்ட முறையிலும், ஒரு நிறுவனத்துக்கும் (ஃபியோடோசியா என்டர்பிரைசஸ்) எங்கள் அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருக்கும் கூடுதல் பொருளாதாரத் தடையானது, உக்ரைனின் இறையாண்மையும், வட்டார ஒருமைப்பாட்டினையும் மீறுவதற்காக அவர்கள் செய்த செயல்களே காரணம்.”

#TamilSchoolmychoice

“உக்ரைனில் நிலவும் பிரச்னைகளுக்கு பொறுப்பாளிகளான அவர்களுக்கு தொடர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.”

“எல்லையில் அமைதியை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ள போரோஷென்கோவின் அமைதித் திட்டத்துக்கு ஆதரவளிப்பதுடன், எங்களது கூட்டணி நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக அழுத்தத்தைக் கொடுப்போம். அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தேவையெனில் மேலும் பொருளாதாரத் தடை விதிக்கவும் தயாராக உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.