கோலாலம்பூர், ஜூன் 24 – உலகின் முன்னணி செல்பேசி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின், புதிய தயாரிப்பான ஐபேட் மினி 3 பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
ஆப்பிள்க்ளப்.டிடபிள்யு (AppleClub.tw) என்ற இணைய தளத்தில் வெளியாகியுள்ள ஆப்பிள் ஐபேட் மினி 3-ன் புகைப்படங்கள் வாடிக்கையாளர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஐபேட் 3-ல் ஆப்பிளின் அனைத்து சிறப்பு அம்சங்களுடன், புதிதாக கைரேகையை கண்டறியும் உணர்த்திகளும் (Touch Finger Print Scanner) பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கைரேகையை கண்டறியும் உணர்திகள் மூலம் பயனர்கள் தங்கள் கைரேகையை திறவுகோலாக பயன்படுத்தி திறன்பேசிகளை இயக்க முடியும்.
மேலும், அந்த இணைய தளத்தில் ஐபோன் 6, ஐபேட் ஏர் 2 மற்றும் 7.9 அங்குல சிறிய ரக டேப்லெட் ஆகியவற்றின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கூறிய அனைத்து சாதனங்களிலும் கைரேகையை கண்டறியும் உனைர்த்திகள் பொருத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய கைரேகை தொழில்நுட்பத்திற்கான செயலி, ஐஒஎஸ் 8-ல் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதனை ஆப்பிள் அல்லாத வேறு ஒரு நிறுவனம் உருவாக்கி உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் 8-ல் முதல் முறையாக பயனர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, பிற நிறுவனங்களின் விசைப் பலகை (Keyboard)-களைப் பயன்படுத்த அனுமதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
படம்: EPA