கோலாலம்பூர், ஜூன் 25 – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதன்முறையாக கூகுளின் ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்ட நோக்கியாவின் ‘எக்ஸ்2’ (Nokia X2) திறன்பேசியினை அறிமுகப்படுத்தியது.
செல்பேசிகளின் முன்னோடியாக திகழ்ந்த நோக்கியாவை வாங்கிய பிறகு, மைக்ரோசாஃப்ட் வெளியிடும் முதல் ஆண்டிராய்டு திறன்பேசி இதுவாகும்.
இந்த புதிய திறன்பேசிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், நோக்கியாவின் சிறந்த ஆக்கக் கூறுகளுடன், தனது முக்கிய செயல் திட்டமான ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ (Cloud Computing)-ஐயும் செயல்படுத்தியுள்ளது.
நோக்கியா எக்ஸ்2-வின் சிறப்பு அம்சங்கள்:-
135 அமெரிக்க டாலர் மதிப்பில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய திறன்பேசியானது, 4.3 அங்குல திரையினைக் கொண்டுள்ளது. 1.2GHz டூயல்-கோர் ஸ்நாப்டிராகன் செயலியினைக் கொண்டுள்ளதால், இதன் திறன் மிகச் சிறப்ப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.1ஜிபி முதன்மை நினைவகம், 4ஜிபி இரண்டாம் நிலை நினைவகம் (32ஜிபி வரை விரிவாக்கலாம்) ஆகிய வசதிகளுடன் இரட்டை சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதியையும் கொண்டுள்ளது.
இந்த புதிய திறன்பேசியில் மைக்ரோசாஃப்ட்-ன் காணொளி அழைப்புகளுக்கான ‘ஸ்கைப்’ (Skype) செயலி, ‘ஒன்டிரைவ்’ (One Drive) இணைய சேமிப்பு மற்றும் பல சிறப்பான செயலிகளையும் உள் அடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளில் ஆப்பிள் மற்றும் சாம்சங் திறன்பேசிகளுக்கு மாற்றாக இந்த நோக்கியா எக்ஸ்2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.