பாக்தாத், ஜூன் 26 – ஈராக் விவகாரத்தில் ஷியா, சன்னி மற்றும் குர்து இன மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட புதிய அரசு அமைக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க முடியாது என அந்நாட்டு அதிபர் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் சிறுபான்மையினராக உள்ள ஆளும் ஷியா பிரிவு அரசுக்கு எதிராக சன்னி பிரிவு தீவிரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல முக்கிய நகரங்களை கைப்பற்றிய அவர்கள், ஈராக்கை இரண்டாக பிரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈராக் அதிபர் மாலிக்கை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி அனைத்து பிரிவு மக்களும் பங்கேற்கக் கூடிய அரசை அமைத்து, பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் இதனை மாலிக் நிராகரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா விரும்புவது போல் ஈராக்கில் அரசு அமைவது என்பது நாட்டின் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மேலும், கடந்த தேர்தலில் மக்கள் அளித்த முடிவுகளுக்கும் விரோதமானது” என்று கூறியுள்ளார்.
மாலிக்கின் இந்த அறிவிப்பினால் அவரது தலைமையிலான அரசை அமெரிக்கா அகற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.