ஜூன் 26 – மத்திய கிழக்கு நாடுகளின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான எட்டிஹாட் ஏர்வேஸ், இத்தாலியின் அலிடாலியா விமான நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பெயர் பெற்ற நிறுவனமான அலிடாலியா, கடந்த வருடம் முதல் வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இத்தாலிய அரசு அந்நிறுவனத்தை மீட்கும் பொருட்டு வழங்கிய, 500 மில்லியன் யூரோக்களும், பெரும் பயனைத் தரவில்லை.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் அழுத்தமான தடங்களைப் பதிக்க காத்துக் கொண்டிருந்த எட்டிஹாட், நஷ்டத்தில் இயங்கும் அலிடாலியாவின் பங்குகளைப் பெற முனைப்பு காட்டியது.
இரு நிறுவனங்களுக்கு இடையே வர்த்தக ரீதியாக பேச்சுவார்த்தைகள் ஒத்து போக, அலிடாலியா தனது விமான சேவையின் 49% பங்குகளை எட்டிஹாட் ஏர்வேஸிற்கு விற்பதாக அறிவித்துள்ளது.
அலிடாலியா உடனான இந்த வர்த்தகம் குறித்து எட்டிஹாட் நிறுவனம் கூறுகையில், “இந்த வர்த்தகம் மூலமாக இத்தாலியின் உள்ளேயும் வெளியேயும் எட்டிஹாட் நிறுவனத்திற்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளது. எனினும், இரு நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தகம் குறித்து எட்டிஹாட் தகவல்கள் ஏதும் வெளியிட வில்லை.