ஜூன் 26 – சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டார் வார்ஸ் என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் ஒன்று வெளிவந்து உலகையே ஒரு கலக்கு கலக்கியது,ஆங்கில திரைப்பட ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.
பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜார்ஜ் லுக்காஸ் (படம்) கைவண்ணத்தில் 37 வருடங்களுக்கு முன்னர் மலர்ந்தது. அதன் பின்னர் ஜார்ஜ் லுக்காஸ் மற்றும் பிரபல இயக்குநர் ஸ்டீவன்ஸ் பீல் பர்க் இயக்கத்தில் தொடர்ந்து பல திரைப்படங்கள் இந்த வரிசையில் வெளிவந்து உலகமெங்கும் கோடிக்கணக்கான வசூலை வாரிக் குவித்தன.
அதுமட்டுமல்லாமல் இந்தத் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை போன்ற உருவ பொம்மைகளும் இந்தப் படத்தில் திரைக்கதை சம்பந்தப்பட பல வகையான நினைவு சின்னங்களும் வடிவமைக்கப்பட்டு அவையும் கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்பில் விற்பனை சந்தையில் இடம்பிடித்தன.
ஆரம்பகாலத்தில் இந்தப் படத்தின் திரைக்கதையை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பாளராக பல்வேறு தயாரிப்பாளர்களின் அலுவலகப் படிக்கட்டுகளை ஏறி இறங்கிய ஜார்ஜ் லுக்காஸ் இத்தகைய கதையம்சம் உள்ள படம் மக்களை கவராது என்று பலரால் நிராகரிக்கப்பட்டார்.
ஆனால், இந்தப் படத்தின் உள்ள பல சிறப்பம்சங்களை அடையாளம் கண்டு 20 செஞ்சூரி பாக்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன் வந்தது. 1977 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளிவந்துள்ள இந்தப்படம் அதன்பிறகு முன் கதை பின்கதை என பல்வேறு படங்களாக வெளிவந்திருக்கிறது. இந்தத் திரைப்படம் குறித்த ஆவணங்கள் உருவ பொம்மைகள் நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றோடு ஜார்ஜ்லுக்காஸின் திரைப்பட வாழ்க்கையை பிரதிபலிக்கும் பல்வேறுபொருட்கள் உள்ளடங்கிய லுக்காஸ் அருங்காட்சியம் ஒன்று அமெரிக்காவின் சிக்காகோ என்ற நகரில் அமைக்கப்படும் என்று ஜார்ஜ் லுக்காஸ் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே திட்ட வடிவில் இருந்த இந்த அருங்காட்சியகம் அமெரிக்காவின் எந்த நகரில் அமையப் போகிறது என்ற ஆருடங்கள் நிலவி வந்தன.
இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தை சிக்ககோ நகரில் தான் அமைக்கவிருப்பதாக ஜார்ஜ் லுக்காஸ் அறிவித்துள்ளார். ஏறத்தாழ 2018ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் முழு பெற்று திறந்து வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.