ஸ்டார் வார்ஸ் தொடரில் 9-வது படமான இந்தப் படம் வட அமெரிக்காவில் மட்டும் வார இறுதியில் 176 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதன் காரணமாக 2019-ஆம் ஆண்டின் மூன்றாவது மிகப் பெரிய முதல் நாள் வசூல் படமாக ஸ்டார் வார்ஸ் திகழ்கிறது.
2015-இல் வெளியான தி போர்ஸ் அவேக்கன்ஸ் (The Force Awakens) 248 மில்லியன் டாலர்களை வசூலித்த நிலையில் 2017-இல் வெளியான ‘தி லாஸ்ட் ஜெடை’ (The Last Jedi) 220 மில்லியன்களை வசூலித்தது. அந்தப் படங்களுடன் ஒப்பிடுகையில் “ஸ்டார் வார்ஸ் – தி ரைஸ் ஆப் ஸ்கைவாக்கர்” குறைவாகவே வசூல் செய்திருக்கிறது.
எனினும் உலகம் முழுவதிலும் இந்தப் படத்தின் வார இறுதி வசூல் 374 மில்லியன் டாலர்களாகும்.
ஸ்டார் வார்ஸ் படங்களின் ஈர்ப்பு மற்றும் தங்களின் மற்ற படங்களுக்கு இருக்கும் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில், டிஸ்னி நிறுவனம் டிஸ்னி பிளஸ் என்ற திரைப்படங்களை இணையவழி கட்டண சேவையின் மூலம் பெறும் புதிய வணிகத்தை அண்மையில் தொடக்கியது.
ஸ்டார் வார்ஸ் வரிசையில் கடைசிப் படம் என விளம்பரப்படுத்தப்படும் “தி ரைஸ் ஆப் ஸ்கைவாக்கர்” படத்துடன் இதுவரையில் ஸ்டார் வார்ஸ் படங்கள் 9 பில்லியன் டாலர்களை உலக அளவில் வசூலித்துள்ளன.
வணிக அளவில் டிஸ்னிக்கு 2019 சாதனை ஆண்டாகும். இந்த ஆண்டில் இதுவரையில் டிஸ்னியின் 6 படங்கள் 1 பில்லியன் டாலர்களுக்கும் மேலான வசூலை வாரிக் குவித்துள்ளன.
ஸ்டார் வார்ஸ் அதில் 7-வது படமாக இணையலாம்.