பெஷாவர், ஜூன் 27 – பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தின் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பாதுகாப்பு காரணம் கருதி முன்னணி விமான நிறுவனங்கள் பெஷாவருக்கான தங்களின் விமான சேவையை ரத்து செய்துள்ளன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் கராச்சியின் ஜின்னா விமான நிலையத்தில் திடீரென நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் 39 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஹாங்காங்கின் கேத்தே பசிபிக் நிறுவனம் பாகிஸ்தானுக்கு செல்லும் தங்களது அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும், பல முன்னணி விமான நிறுவனங்கள் இது தொடர்பான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறி வந்தன.
இந்த நிலையில், தற்போது நடந்த விமானத் தாக்குதலைத் தொடர்ந்து எமிரேட்ஸ், எட்டிஹாட் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்கள் பெஷாவருக்கான தங்களின் விமான சேவையை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளன. பாகிஸ்தான் விமானத்தின் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு இதுவரை இந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
விமான நிறுவனங்களின் இந்த முடிவு தற்காலிகமானது தான் என்றாலும் இதனால் பாகிஸ்தானின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.