புதுடில்லி, ஜூன் 29 – இந்துக்களின் புனித யாத்திரைகளுள் ஒன்றாகக் கருதப்படும் அமர்நாத் குகைக் கோயில் யாத்திரை நேற்று தொடங்கியது. 44 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரை பலத்த பாதுகாப்புகளுடன் தொடங்கியது.
அமர்நாத் குகைக் கோயிலில் இந்துக்களின் தெய்வமான சிவபெருமான் குடியிருப்பதாக ஐதீகம் நிலவுகின்றது.
‘பால்டால் பாதை’ எனக் கூறப்படும் பாதையின் வழி இந்த வருடாந்திர பயணம் காண்டர்பால் மாவட்டப் பகுதியிலிருந்து தொடங்கியுள்ளது.
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து, வடகிழக்கு நோக்கி சுமார் 125 கிலோமீட்டர் தூரத்தில், ஏறத்தாழ 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. காஷ்மீரத்தின் தென் இமயமலைப் பகுதியில் எழில் மிக்க மலைச் சூழலில் இந்த குகை அமைந்துள்ளது.
முதல் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை பயணத்தைத் தொடங்குவதற்கு சுமார் 8,000 பக்தர்கள் பால்டால் மையத்தில் வந்து குவிந்தனர். மிகவும் கரடுமுரடான பாதையைக் கொண்ட 16 கிலோமீட்டர் பயணத்தை அவர்கள் நேற்று தொடங்கினர்.
அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் இந்த கால கட்டத்தில் இயற்கையாக எழுந்தருளும் பனிலிங்கத்தை தரிசிப்பதே இந்த புனித யாத்திரையின் நோக்கமாகும்.
அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக அமையும் பனிலிங்கத்தை தரிசிக்க சில பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் முன்கூட்டியே சென்றடைந்துள்ளனர்.
பயணம் செல்லும் பாதையிலும், பக்தர்களுக்கும் இராணுவம், காவல்துறையினர் பலத்த பாதுகாப்பை வழங்குவர்.
படம்: EPA