காஷ்மீர், ஜூலை 23 – அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பதாக காஷ்மீர் அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறை தகவல்களை மேற்க்கோள் காட்டி, உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜி நாடாளுமன்ற அவையில் இதனை தெரிவித்தார்.
அமர்நாத் யாத்திரை தொடங்கிய போது யாத்ரீகர்கள் சென்ற வாகனங்கள் மீது காஷ்மீர் மாநிலம் கந்தர்பூர் என்ற இடத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனிடையே யாத்ரீகர்கள் செல்லும் பாதையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதால், யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் படியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளு படியும் காஷ்மீர் அரசை கேட்டுக்கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
ராணுவம், மாநில காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இதுத்தொடர்பாக சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது.
இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.