Home நாடு எம்எச்370: யாரோ விமானத்தின் மின்சக்தியை செயலிழக்க செய்துள்ளனர் – புதிய ஆதாரம் வெளியீடு!

எம்எச்370: யாரோ விமானத்தின் மின்சக்தியை செயலிழக்க செய்துள்ளனர் – புதிய ஆதாரம் வெளியீடு!

654
0
SHARE
Ad

mh370கோலாலம்பூர், ஜூன் 30 – மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தில், மின் சக்தி செயலிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், விமானத்தை ரேடார் தொடர்பில் இருந்து விலக்கும் நோக்கத்தில் விமானிகள் அறையில் இருந்து யாரோ இதை செய்திருக்க வேண்டும் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பிரபல தி டெலகிராப்  இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானிகள் அறையில் கருவிகளை செயலிழக்கச் செய்ய யாரோ முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விமான விபத்துகள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த மார்ச் 8 -ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு விமானம் புறப்பட்ட 90  நிமிடங்களுக்குள், விமானத்தின் செயற்கைக்கோள் (satellite) தொடர்பு, வழக்கத்திற்கு மாறாக துண்டிக்கப்பட்டு, மீண்டும் செயற்கைக்கோளுடன் இணைவதற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

விமானத்தின் மின்சக்தி செயலிழந்தாலோ அல்லது அதில் ஏதாவது இடையூறு ஏற்பட்டாலோ மட்டுமே, ‘ஹேண்ட்சேக்’ என்று அழைக்கப்படும் இந்த  ‘லாக் ஆன்’ – log on கோரிக்கை செயற்கைக் கோளுக்கு அனுப்பப்படும் என்றும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

“விமானம் நடுவானில் இருந்து கொண்டு அவ்வாறு செயற்கைக் கோளுக்கு கோரிக்கை விடுவது வழக்கத்திற்கு மாறானது. விமானத்தில் இருந்து கோரிக்கை வந்த நேரம் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு இலாகா தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துத்துறை வல்லுநர் டேவிட் கிலீவ் கூறுகையில், இது போன்ற மின்சக்தி செயலிழப்புகள் நடக்குமானால் அது யாரோ விமானிகள் அறையில் இருந்து விமானத்தின் இயக்கங்களை மாற்றியமைக்க முயற்சி செய்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இம்மார்சட் செயற்கைக்கோள் நிறுவனமும், மின்சக்தி செயலிழப்பு ஏற்பட்டது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டுள்ளது. போயிங் இரக விமானங்களை செயற்கைகோளுடன் இணைத்து அதன் இயக்கங்களை கவனித்து வருவது தான் இம்மார்சட் நிறுவனத்தின் பணியாகும்.

எம்எச்370 விமானம் மலேசிய இராணுவ ரேடாரில் பதிவான 3 நிமிடங்களுக்குப் பிறகு சரியாக அதிகாலை 2.25 மணியளவில், விமானத்தில் இருந்து செயற்கைக் கோளுக்கு ‘லாக் ஆன்’ கோரிக்கை சென்றுள்ளதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அதன் பின்னர், 6 மணி நேரங்கள் கழித்து மீண்டும் ஒரு ‘லாக் ஆன்’ கோரிக்கை விமானத்தில் இருந்து வந்துள்ளது. எனவே அது தான் விமானம் எண்ணெய் முழுவதும் தீர்ந்து இறுதியாக விழுந்த இடமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக்கத்தைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துத்துறை நிபுணர் பீட்டர் மாரோஸிகி கூறுகையில், “விமானிகள் அறையில் இருந்த யாரோ ஒருவரின் முயற்சியால் மின் சக்தி செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் ஒட்டுமொத்த விமானத்தின் மின்சக்தியும் செயலிழக்க செய்யவில்லை. ஒரு குறிப்பிட்ட இயக்கங்களின் மின் சக்தி மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அதை செய்தவர் தான் என்ன செய்கிறோம் என்று நன்கு தெரிந்து தான் செய்துள்ளார். எனவே இது விமானக் கடத்தல் அல்லது விமானத்தை பிணை பிடிக்கும் முயற்சியாக இருந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 8 -ம் தேதி அதிகாலை, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து 239 பேருடன், சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட விமானம் நடுவானில் மாயமானது.

இதுவரை நடத்தப்பட்ட அனைத்துலக தேடுதல் வேட்டையில், விமானம் பற்றிய எந்த ஒரு தடையமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.