பெங்களூர், ஜூலை 1 – கொச்சியில் இருந்து நேற்றிரவு டில்லிக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா ஏ.ஐ.407 விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பெங்களூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 8.40 மனிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில், 156 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 8 ஊழியர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
அந்த தகவலையடுத்து, உடனடியாக அந்த விமானத்தின் விமானியை தொடர்பு கொண்ட கொச்சி விமான நிலைய அதிகாரிகள், அருகில் உள்ள விமான நிலையத்தில் உடனடியாக தரையிறங்கும்படி உத்தரவிட்டனர்.
அப்போது கர்நாடகம் மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்த அந்த விமானம் பெங்களூரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரவு சுமார் 9.57 மணியளவில் அவசரமாக தரையிறங்கியது.
பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு நீண்ட நேரம் வரை அந்த விமானத்தை சோதனையிட்டதில் எந்த வெடிப்பொருளும் விமானத்தினுள் இல்லை என்பது தெரியவந்தது.
இதனிடையே, கொச்சியில் இருந்து அந்த விமானத்தில் டில்லிக்கு புறப்பட்டு சென்ற ஒரு பெண், தனது நண்பரை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு, விமான நிலையத்தில் சோதனை கெடுபிடிகள் அதிகமாக உள்ளது.ஒருவேளை, வெடிகுண்டு பீதி ஏதும் இருக்குமோ என பயமாக உள்ளது என்று இணைப்பை துண்டித்துவிட்டார்.
அந்த நண்பர் தான் பதற்றம் அடைந்து கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அதே தகவலை தெரிவித்துவிட்டார். இதனாலேயே விமானம் பெங்களூரில் தரையிறக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.