ஜோர்ஜ் டவுன், ஜூலை 01 – பினாங்கு மாநிலம் தாசேக் கெலுகொர் பகுதியில் 12 வயது மாணவன் ஒருவனுக்கு கொசுக்களின் மூலம் பரவும் ஜேஇ (Japanese Encephalitis) என்ற ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு, சுயநினைவு இன்றி ஆபத்தான நிலையில் தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடந்த மே 18 -ம் தேதி காய்ச்சல் அதிகமாகி, கப்பளா பத்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு, தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இது குறித்து பினாங்கு சுகாதாரதுறை இயக்குனர் டத்தோ டாக்டர் லைலானோர் இப்ராஹிம் கூறுகையில், “அச்சிறுவன் தற்பொழுது சுயநினைவு இழந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் பினாங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
இக்கிருமி, பாதிக்கப்பட்ட க்யூலெக்ஸ் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதன் மூலம் மிக விரைவாக பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
மேலும், பினாங்கு மாநில அரசு அக்குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள பன்றி பண்ணைகளிலிருந்து அக்கிருமி பரவுகிறதா என தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
அத்துடன், பன்றிப் பண்ணைக்கு இரண்டு கிலோமீட்டர் அருகே உள்ள பள்ளிகளில் இந்த நோய் குறித்து ஆய்வு நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்துள்ளனர்.