புதுடெல்லி, ஜூலை 9 – பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷாவை அக்கட்சி இன்று அறிவிக்கவுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
பாஜகவின் நாடாளுமன்ற விவகாரக் குழு மற்றும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பான முடிவை இன்று தலைநகர் டெல்லியில் கூடி முடிவுசெய்ய உள்ளதாக நம்பத்தக்க சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக தேசிய தலைவராக உள்ள ராஜ்நாத்சிங், மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள நிலையில், தலைவர் பொறுப்பிலிருந்து அவர் ராஜினாமா செய்யவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜகவின் அடுத்த தேசியத் தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியடைய அமித் ஷா பெரும் பங்கு வகித்தார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக பலவீனமாக இருந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு அவர், அம்மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதும் அல்லாமல், பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
வதோதரா மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நரேந்திர மோடி, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். வதோதராவில் நடைபெறும் இடைத்தேர்தலில் அமித்ஷா போட்டியிடலாம் என்று பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.