பெலோ ஹோரிசோண்டே, ஜூலை 9 – பிரேசில் குழு 7-1 கோல் கணக்கில் தனது சொந்த மண்ணிலேயே படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது குறித்து கருத்துரைத்த அதன் பயிற்சியாளர் லூயிஸ் பிலிப் சோலாரி “இதுதான் தன் வாழ்நாளிலேயே மிக மோசமான நாள்” என வர்ணித்துள்ளார்.
2002ஆம் ஆண்டில் பிரேசில் குழுவை பயிற்சியாளராக இருந்து வழி நடத்தி அந்த நாடு ஐந்தாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய சோலாரியின் அனுபவம் இந்த முறையும் பிரேசில் குழுவுக்கு கைகொடுக்கும் என்ற பிரேசில் காற்பந்து சங்கத்தின் எதிர்பார்ப்பு நொறுங்கி சிதைந்து போய்விட்டது.
“ஒரு காற்பந்து விளையாட்டாளராக, ஒரு பயிற்சியாளராக, விளையாட்டு ஆசிரியராக, நீண்ட வரலாற்றைக் கொண்ட எனது வாழ்க்கையில் மோசமான நாள் இதுதான்” என நேற்று பிரேசில்-ஜெர்மனி ஆட்டம் நடைபெற்ற பெலோ ஹோரிசோண்டே நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சோலாரி தெரிவித்துள்ளார்.
“இனிவரும் காலங்களில் பிரேசில் சந்தித்த இந்த 7-1 கோல் எண்ணிக்கையிலான மோசமான தோல்வியை வைத்துத்தான் நான் நினைவு கூரப்படுவேன். ஆனால் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டே போதே அத்தகைய ஒரு எதிர்பாராத நிலைமை ஏற்படலாம் என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்” என்றும் சோலாரி கூறியிருக்கின்றார்.
இதற்கு முன் ஆறு கோல் வித்தியாசத்தில் பிரேசில் தோற்றது 1920ஆம் ஆண்டில்தான் என்னும்போது ஜெர்மனியுடனான இந்த தோல்வியும் சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரேசில் சந்தித்த மிக மோசமான தோல்வி இதுதான்.
“பிரேசில் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன்”
ஜெர்மன் நாட்டு பயிற்சியாளர் ஜோசிம் லூயியுடன் சோலாரி
“இந்த தோல்விக்காக, நாங்கள் பிரேசில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றோம். மன்னியுங்கள்! எங்களால் இறுதி ஆட்டம் வரை முன்னேற முடியவில்லை” என்றும் சோலாரி சோகத்துடன் கூறியுள்ளார்.
“பிரேசில் நாட்டு மக்களுக்கும், காற்பந்து இரசிகர்களுக்கும் நான் சொல்ல வேண்டிய செய்தி என்னவென்றால், எங்களால் இயன்றதை நாங்கள் செய்ய முயற்சித்தோம். ஆனால், ஆறு அல்லது ஏழு நிமிடங்களுக்குள் நான்கு கோல்கள் அடிக்கக் கூடிய திறனும், இலாவகமும் வாய்ந்த மிகத் திறமையான குழுவிடம்தான் நாங்கள் தோற்றிருக்கின்றோம்” என்றும் சோலாரி குறிப்பிட்டுள்ளார்.
“ஆட்டம் முடிந்ததும் ஜெர்மன் நாட்டு குழுவினரிடம் பேசிய போது, அவர்களும் – இது எப்படி நடந்தது என எங்களுக்கே தெரியவில்லை, ஐந்து முறை கோல் முனையை நோக்கி நாங்கள் பந்தை அடிக்க ஐந்து முறையும் அது கோலாகியது – என்று கூறினார்கள்” என்று கூறியுள்ள சோலாரி, தோல்விக்கு தான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் முதல் கோல் போடப்பட்டதுமே பிரேசில் விளையாட்டாளர்கள் தடுமாறிவிட்டார்கள், தங்களின் கட்டுக்கோப்பை இழந்து விட்டார்கள், அதனால்தான் நாங்கள் படுமோசமான தோல்வியை அடைந்ததாக தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நெய்மார் விளையாடியிருந்தாலும் இதே கதிதான்
தோல்விக்கு நெய்மாரைக் காரணம் காட்ட தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ள சோலாரி, நெய்மார் விளையாடியிருந்தாலும், பிரேசிலுக்கு இதே நிலைமைதான் ஏற்பட்டிருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்குள் ஏற்பட்ட கட்டுக் கோப்பு இழந்த நிலைமையால் ஜெர்மனி அடுத்தடுத்து கோல்களைப் புகுத்தியது. இதற்கும் நெய்மாருக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை” என்பதுதான் சோலாரியின் வாதம்.
இருப்பினும் ‘வாழ்க்கை இந்த தோல்வியோடு முடிந்து விடுவதில்லை’ என்றும் தன்னம்பிக்கையோடு சோலாரி தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெறும் அர்ஜெண்டினா-நெதர்லாந்து நாடுகளுக்கிடையிலான போட்டியில் வெல்லும் நாட்டுடன் ஜெர்மனி இறுதி ஆட்டத்தில் மோதும்.
தோல்வியடையும் நாட்டுடன் மூன்றாவது இடத்திற்கு பிரேசில் விளையாடும்.
அந்த ஆட்டத்திலாவது பிரேசில் தனது திறமையை – ஆளுமையை மீண்டும் ஒரு முறை காட்டும் வாய்ப்பு இரசிகர்களுக்கு வாய்க்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!