சென்னை, ஜூலை 10 – சினிமாப் பாடல்கள், நாவல், கவிதை, கட்டுரைகள் என பல முனைகளிலும் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தி தனி முத்திரை பதித்து வரும் கவிப் பேரரசு வைரமுத்து எதிர்வரும் ஜூலை 13ஆம் தேதி தனது அறுபதாம் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
தமிழகத்தின் கோயம்புத்தூர் நகரில் வைரமுத்துவின் மணிவிழாக் கொண்டாட்டங்கள், உலகெங்கிலும் இருந்து வரப்போகும் அவரது இலக்கிய இரசிகர்களின் பாராட்டுரைகளோடு, கலை, இலக்கிய விழாவாக நடைபெறுகின்றது.
வைரமுத்துவின் 60ஆம் ஆண்டு அகவை நிறைவை முன்னிட்டு, தமிழகத்தின் ஆனந்த விகடன் வார இதழ் அவரிடம் 60 கேள்விகளைத் தொடுத்து அதற்கான அவரது பதில்களையும் பிரசுரித்துள்ளது.
அதில் ஒரு கேள்வி : “எந்த நாட்டு மழை பிடிக்கும்?”
அதற்கு பதிலளித்துள்ள கவிஞர், “மலேசிய மழை, காரணம் அதிசுத்தமானது” என பதிலளித்துள்ளார்.
மலேசியாவிற்கு பலமுறை வருகை தந்துள்ள வைரமுத்துவிற்கு இங்கு பிடித்தமான பல நண்பர்கள் இருக்கின்றனர் – அவருக்கு மலேசியாவின் பல அம்சங்கள் பிடிக்கும் என்பது நமக்குத் தெரியும்.
இப்போதுதான் அவருக்கு மலேசிய நாட்டு மழையும் பிடிக்கும் என்பதைத் தெரிவித்துள்ள்ளார்.
பிடித்த படம் “நாடோடி மன்னன்”
இதற்கிடையில், “இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார்த்த படம் எது?” என்ற மற்றொரு கேள்விக்கு எம்ஜிஆர் நடித்த ‘நாடோடி மன்னன்’ என்றும் வைரமுத்து பதிலளித்துள்ளார்.
“நாடோடி மன்னன் சினிமா என்ற பிம்பத்தை ஆறு வயதில் எனக்கு கட்டி எழுப்பிய முதல் படம். இன்றும் ரசிக்கிறேன். 60இல் இருந்து 6க்குப் பயணப்படுகிறேன்” என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.