ரூ 450 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது மங்கள்யான் விண்கலம்.
இது கடந்த நவம்பர் மாதம் 5-ஆம் தேதி ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது ஆழமான விண்வெளி பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது.
இந்த விண்கலத்தில் கடந்த ஜூன் 11-ஆம் தேதி ஒரு சிறிய திருத்தம் செய்யப்பட்டது. அதன் மூலம் ஒதுங்கி இருந்த விண்கலம் மீண்டும் சரியான பாதைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது பேஸ்புக் பக்கத்தில் மங்கள்யான் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். அதில், முன்கூட்டியே திட்டமிட்டபடி மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை இன்னும் 75 நாட்களில், அதாவது வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி சென்றடையும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், இந்த விண்கலமானது இதுவரை 525 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய நிலையில் பூமியில் இருந்து அனுப்பப்படும் தகவல் விண்கலத்தை சென்று அடையவும், அங்கிருந்து தகவல் பூமிக்கு வந்து சேரவும் 15 நிமிடங்கள் ஆவதாக அவர்கள் கூறியுள்ளனர்.