நியூயார்க், நவம்பர் 27 – இந்தியாவின் தொழில் நுட்பத் திறனை உலகுக்கே எடுத்துக் காட்டும் வண்ணம் செவ்வாய்க் கிரகம் சென்றடைந்து, சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘மங்கள்யான்’ விண்கலத்திற்கு தொடர்ந்து உலகின் பல முனைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
(கோப்புப் படம்) கடந்த நவம்பர் 24ஆம் தேதி மங்கள்யான் செவ்வாய்க் கிரகத்தை வெற்றிகரமாக சென்றடைந்த வெற்றியைப் பாராட்டி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து இந்தியப் பிரதமர் தொலைத் தொடர்பு தொலைக்காட்சி மூலம் உரையாடிய காட்சி
உலகின் பழமையான, புகழ்பெற்ற ஆங்கில வாரப் பத்திரிக்கை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘டைம்’ (TIME). அந்தப் பத்திரிக்கையின் பாராட்டுகளையும் மங்கள்யான் பெற்றுள்ளது. அந்தப் பத்திரிக்கை தேர்வு செய்துள்ள இந்த ஆண்டின் சிறந்த 25 கண்டுபிடிப்புகளுக்கான பட்டியலில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மங்கள்யான் குறித்து டைம் பத்திரிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
“செவ்வாய் கிரகத்திற்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக விண்கலத்தை யாருமே நிறுவியதில்லை. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளே முதல் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளன. ஆனால் செப்டம்பர் 24-ம் தேதி இந்தியா அதை சாத்தியமாக்கி உள்ளது. அன்று தான் மங்கள்யான் செவ்வாய் கிரகத்திற்குள் நுழைந்தது. வேறு எந்த ஆசிய நாடுகளாலும் செய்ய முடியாத சாதனையை இந்தியா செய்து காட்டியது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், 2 இந்தியர்களின் மற்ற கண்டுபிடிப்புகளும் இடம்பெற்றுள்ளன. சிறை கைதிகளின் தற்கொலையைத் தடுக்க நளினி நத்கர்னி எனும் கல்லூரி பேராசிரியை ப்ளூ ரூம் எனும் புதிய கருவியை கண்டுபிடித்தார். இதன் மூலம் கைதிகள் பாலைவனம், நீர்வீழ்ச்சி, வெளி உலகம் ஆகியவற்றின் காணொளிகளைக் காணமுடியும்.
அதேபோல் முன்னாள் கூகுள் பொறியியலாளர் பிரமோத் சர்மா என்பவர் ஆஸ்மோ என்ற தட்டைக் கணினியுடன் கூடிய பொம்மை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆஸ்மோவும் டைம் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
மேலும் இந்தப் பட்டியலில் அமெரிக்க விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.