Home கலை உலகம் தமிழர்களின் அலட்சியத்தால் மட்டுமே தமிழ் அழியும் – கவிஞர் வைரமுத்து!

தமிழர்களின் அலட்சியத்தால் மட்டுமே தமிழ் அழியும் – கவிஞர் வைரமுத்து!

1778
0
SHARE
Ad

kavignar vairamuthu,கோவை, ஜூலை 14 – கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாளை முன்னிட்டு, வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள், கலை இலக்கியத் திருவிழா கோவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது,

“உலக நாகரீகத்துக்கு பங்களிப்பு செய்த மொழி தான் தமிழ் மொழி. எனவே தான் தமிழை தலையில் தூக்கி கொண்டாடுகிறோம். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா கண்டங்களில் உள்ள நாடுகள் இந்த மொழியைதானே பின்பற்றுகின்றன.”

“ஜாதிக்கு எதிரான குரல் சித்தர்கள் காலத்திலேயே எழும்பி இருக்கிறது. உடம்பில் ஜாதியை அடையாளம் காட்டமுடியுமா என்று கேட்டவனும் தமிழன்தான். காக்கை, குருவி எங்கள் சாதி என்று பாரதி பாடினான். அந்த அளவுக்கு தமிழ்மொழி உயர்வு பெற்றது.”

#TamilSchoolmychoice

“அந்த உயர்வான தமிழ்மொழி செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த செம்மொழிக்கு தகுந்த உயரம் கிடைத்துள்ளதா? என்றால் அது கேள்விக்குறிதான். உலக செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை. உலக இலக்கியங்கள், கவிதைகளை எடுத்துப்பார்த்தால் அதில் தமிழ் இல்லை.”

kavignar vairamuthu“தமிழ்மொழி அழிந்துவிடும் என்று யுனஸ்கோ அறிவித்துள்ளது. அழிந்துபோக எங்கள் மொழி லத்தீன் மொழியோ, சமஸ்கிருத மொழியோ இல்லை. 2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட மொழி.”

“தமிழ் மொழி அழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்றால் தமிழ் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை தமிழ் படிக்க வையுங்கள். தமிழ் சொல்லிக்கொடுங்கள். தமிழை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று நீங்கள் அரசுக்கு கோரிக்கை வையுங்கள்.”

“தமிழை அழிக்க வேறு சக்திகள் எதுவும் வராது. அப்படி வந்ததும் இல்லை. தமிழ் அழியும் என்றால் அது தமிழர்களின் அலட்சியத்தால் மட்டுமே நடக்கும். எனவே நாம் தமிழ் மொழியை வளர்ப்பதுடன், உலகம் முழுவதும் எடுத்துச்செல்வோம்” என கவிஞர் வைரமுத்து பேசினார்.