கோலாலம்பூர், ஜூலை 16 – மலேசியாவின் மிக முக்கிய மூன்று வங்கிகளான ‘சிஐஎம்பி குழுமம்’ (CIMB Group), ‘ஆர்எச்பி கேபிடல்’ (RHB Capital), ‘மலேசியா பில்டிங் சொஸைட்டி’ (Malaysia Building Society) ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த வங்கியாக உருவாக்க முடிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மலேசியாவின் இரண்டாவது பெரிய வங்கியான சிஐஎம்பி குழுமம் இதற்கான அடிப்படை பேச்சுவார்த்தையை மற்ற இரு வங்கிகளுடனும் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
ஒருவேளை இந்த ஒருங்கிணைப்பு சாத்தியமானால் தென்-ஆசியாவிலேயே நான்காவது மிகப்பெரிய வங்கி என்ற சிறப்பினை அந்த ஒருங்கிணைக்கப்பட்ட வங்கி பெரும்.
இந்த மூன்று வங்கிகளின் ஒட்டு மொத்த மதிப்பு 614 பில்லியன் ரிங்கிட்டுகள் ஆகும். மலேசியாவின் முன்னணி வங்கியான ‘மலாயன் வங்கி’ (May Bank)-க்கு நிகரான போட்டியை அளிக்க சிஐஎம்பி குழுமம் இத்தகைய முயற்சிகளை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சிஐஎம்பியின் இத்தகைய முயற்சி கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது. வர்த்தகம் குறித்த மதிப்பீடுகளை வெளியிடும் ‘ஃ பிட்ச்’ (Fitch) நிறுவனம் சிஐஎம்பி ஒருங்கிணைந்த மிகப்பெரிய இஸ்லாமிய வங்கியாக்கும் முயற்சி பற்றி கூறுகையில், “சிஐஎம்பி, ஆர்எச்பி, எம்பிஎஸ்பி ஆகிய வங்கிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி பேராவலை ஏற்படுத்தி உள்ளது.”
“எனினும், இதன் விளைவுகள் பெரும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தி விடும். மிகச் சிறப்பான பொருளாதாரத்தை நோக்கி செல்லும் மலேசியாவிற்கு, இந்த முயற்சி பெரும் முட்டுக்கட்டையாகி விடும். இந்த மூன்று நிறுவனங்களை இணைத்து புதிதாக உருவாகும் வங்கிக்கு கடும் சவால்களும், பொருளாதார சிக்கல்களும் காத்திருக்கும்” என்று கூறியுள்ளது.
சிஐஎம்பி குழுமம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆர்எச்பி கேபிடல் வங்கியை ஒருங்கிணைக்க இரு முறை முயற்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.