பிரேசிலியா, ஜூலை 17 – பிரேசிலில் நடந்து வரும் பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் அந்நாடுகளிடையே வர்த்தகம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிகா உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ்-ன் 6-வது மாநாடு பிரேசிலில் நடந்து வருகின்றது. இந்த மாநாட்டையொட்டி, உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது அந்நாடுகளுக்கு இடையே வர்த்தக ரீதியிலான உடன்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி, பிரிக்ஸ் நாடுகளில், உள்நாட்டுத் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ள, பிற நாடுகளின் முதலீடுகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான கெடுபிடிகளை தளர்த்திக் கொள்வது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த உடன்பாடு உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதலின்படி அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக, சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பிரிக்ஸ் நாடுகள் வர்த்தக ரீதியாக ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.