கோலாலம்பூர், ஜூலை 17 – கடந்த செவ்வாய்கிழமை குவாந்தானில், தன் புத்தம் புதிய காரின் பின்னால் எதிர்பாராதவிதமாக தனது காரை மோதிய முதியவரை, நடுரோட்டிலேயே வைத்து கண்டபடி திட்டிய பெண், தனது காரில் இருந்து ஸ்டியரிங் பூட்டும் கம்பியை எடுத்து அம்முதியவரின் காரை பலமுறை அடித்து மிகவும் அடாவடித்தனமாக நடந்து கொண்டார்.
இந்த சம்பவம் மற்றொரு வாகனமோட்டியால் காணொளியாக பதிவு செய்யப்பட்டு பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. பேஸ்புக்கில் அப்பெண்ணின் செயலுக்கு எதிராக பலரும் கண்டனங்கள் தெரிவிக்க ஆரம்பித்தவுடன், பயந்து போன அப்பெண்மணி அந்த காணொளியை நீக்குமாறும், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அறிவித்தார்.
இந்த செய்தியை நாட்டிலுள்ள பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் தலைப்பு செய்தியாக்கி விட, ஒரே நாளில் அப்பெண்மணி இணையத்தளங்களில் பிரபலமாகிவிட்டார்.
இந்த விவகாரத்தில் தலையிட்ட, பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான டிஜி, அந்த முதியவருக்கும், அந்த பெண்ணிற்கும் ஏற்பட்ட செலவை ஏற்பதாக தனது பக்கத்தில் அறிவித்து விளம்பரம் தேடிக் கொண்டது.
அதையும் மிஞ்சும் விதமாக பிரபல வானொலியான டிஎச்ஆர், அப்பெண்மணியை அழைத்து நேரடி நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்பது குறித்து விளக்கமளிக்க வாய்ப்பு அளித்தது.
டிஎச்ஆர் வானொலி அறிவிப்பாளர் உதயா, அப்பெண் ஏதோ பெரிய சாதனை விட்டதைப் போல் எண்ணி அவருடன் புகைப்படமும் எடுத்து கொண்டதற்கும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பெண்மணியின் அடாவடித்தனத்தை கண்டு ஏற்கனவே கொதித்துப் போயிருந்த மலேசிய மக்கள், டிஎச்ஆரின் இந்த செயலை அறிந்ததும் மேலும் ஆத்திரமடைந்துள்ளனர்.
“நாட்டில் எத்தனையோ பேர் பல்வேறு பிரச்சனைகளுடன் இருக்க, அவர்களுக்கு வாய்ப்பளிக்க யோசிக்கும் டிஎச்ஆர் வானொலி, அடாவடித்தனம் செய்த அப்பெண்ணை அழைத்து பேச வைத்தது ஏன்?” என பேஸ்புக்கில் டிஎச்ஆர் வானொலிக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் சிலர், நாட்டிலுள்ள மலேசியக் கலைஞர் மிகவும் கஷ்டப்பட்டு பாடல்களை தயாரித்து அது டிஎச்ஆரில் ஒலிபரப்பாகாதா? என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரு சிறு வாய்ப்பு கூட அளிக்காத டிஎச்ஆர் தவறு செய்த அப்பெண்மணியை பிரபலப்படுத்துவது ஏன்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
“அப்படியென்றால், மலேசியக் கலைஞர்களே சாலையில் இறங்கி சண்டையிட்டு, அதை காணொளியாகப் பதிவு செய்து பேஸ்புக்கில் பரவ விடுங்கள். அப்போது தான் டிஎச்ஆர் போன்ற வானொலிகள் உங்களை திரும்பிப் பார்க்கும்” என்றும் ஒரு சிலர் கிண்டலாகக் கூறுகின்றனர்.
இந்நிலையில், தற்போது டிஎச்ஆர் அறிவிப்பாளர் உதயா, அப்பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் பல்வேறு கண்டன வாசகங்கள் எழுத்தப்பட்டு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.