Home நாடு எம்.எச்.17 – பயணிகள் எண்ணிக்கையில் 295 -298 என்ற குழப்பம் நேரலாமா?

எம்.எச்.17 – பயணிகள் எண்ணிக்கையில் 295 -298 என்ற குழப்பம் நேரலாமா?

690
0
SHARE
Ad

mh17கோலாலம்பூர், ஜூலை 19 – யாரும் எதிர்பாராதவிதமாக, எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, பயணிகள் அனைவரும் பலியாகிவிட்ட, இந்த சோக தருணங்களில், நாம் மாஸ் விமான நிறுவனத்தையோ, அல்லது மற்ற இலாகாக்களையோ வேண்டுமென்றே குற்றம் குறைகள் சுமத்துவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.

ஆனால், ஒரு முக்கிய தவறினை சுட்டிக் காட்ட வேண்டியது அவசியமாகும்.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அடுத்த சில நிமிடங்களிலேயே, தகவல் ஊடகங்களில் மூலமாகவும், நட்பு ஊடகங்களின் மூலமாகவும், செய்திகள் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் மாஸ் விமான நிறுவனம், விமானப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை, 295 என அறிவித்தது.

#TamilSchoolmychoice

280 பயணிகள், 15 பேர் பணியாளர்கள் என தெளிவான விளக்கமும் கொடுத்தது.

சம்பவம் நிகழ்ந்த கொஞ்ச நேரத்தில், நடவடிக்கை அறைக்கு வந்து, பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய பிரதமர் நஜிப் கூட 295 பயணிகள் உயிர்ப்பலி என சோகத்துடன் அறிவித்தார்.

ஆனால், பல மணி நேரங்கள் கழித்து, அடுத்த நாள் மாஸ் விமான நிறுவனம் விமானத்தில் இருந்தது 298 பயணிகள் என அறிவித்தது.

mh17,இந்த குழப்பம் நேர்ந்திருக்கலாமா?

இப்படியொரு குழப்பம், விமானப் பயணத்தை முறையாக நிர்வகிக்க வேண்டிய தரப்பிலிருந்து எழுந்திருப்பது நியாயமா?

காரணம், விமானத்தின் பயணிகள் எண்ணிக்கை என்பது விளையாட்டுத்தனமான ஒரு விஷயமல்ல.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னால் பல கட்டங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுத்தான் பயணிகள் இறுதியாக விமானத்தில் ஏறுகின்றார்கள்.

mh17-nationals-listஎந்தப் பயணியும், பயண அனுமதிச் சீட்டுடன் நேரடியாக விமானத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. அவருடைய பயணச் சீட்டு உறுதி செய்யப்பட்டு, போர்டிங் பாஸ் எனப்படும் விமானத்தில் ஏறுவதற்கான மற்றொரு சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுத்தான் அவர் விமானத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றார்.

விமானம் ஏறும் அனுமதி (போர்டிங் பாஸ்) விமான நிலையத்தின் பயண முகப்பிடத்தில் வெளியிடப்பட்டு, விமானத்தின் பயணிகளுக்கான பதிவுகள் மூடப்பட்ட உடனேயே, சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் பயண முகப்பிடத்தில், எத்தனை பயணிகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது துல்லியமாகத் தெரிந்து விடும்.

அதன்பிறகு, விமானம் ஏறுவதற்கு முன்னால், மீண்டும் ஒருமுறை விமானம் ஏறும் முன் அனுமதிச் சீட்டு சரிபார்க்கப்பட்டு, அதில் பாதி கிழிக்கப்பட்டுத்தான் ஒரு பயணி விமானத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றார்.

18-malaysian-airlines232crash-600இந்த கட்டத்திலும் விமானத்தின் உள்ளே நுழையும் பயணிகளின் எண்ணிக்கை மறு உறுதி செய்யப்படுகின்றது.

இத்தனை பரிசோதனைக் கட்டங்களையும் தாண்டிய பின்னர், ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானத்தின் பயணிகள் எண்ணிக்கையில் குழப்பம் நேருவதற்கு வாய்ப்பே இருக்க முடியாது.

அதிலும், விமானத்தில் இருந்த அத்தனை பேரும் உயிரிழந்து விட்டார்கள் என்னும்போது, எத்தனை பயணிகள் என்ற அறிவிப்பில் மாஸ் மேலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டுமல்லவா?

திடீரென கூடுதலாக மூன்று பயணிகள் மரண எண்ணிக்கையில் சேர்க்கப்படுவது – மாஸ் நிறுவனம் மட்டுமல்ல – எந்த நிறுவனம் செய்திருந்தாலும் ஒப்புக் கொள்ள முடியாத தவறாகும்.

மாஸ் மீது மக்கள் மேலும் நம்பிக்கையிழப்பதற்கு இந்த 298-295 பயணிகள் எண்ணிக்கை குழப்பமும் காரணமாக அமையும்.

-இரா.முத்தரசன்