வாஷிங்டன், ஜூலை 19 – எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யா மீது பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையால், மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. போராளிகளின் நோக்கம் என்ன என்று தற்போது வரை யூகிக்க முடியவில்லை.”
“இது உலகளாவிய அளவில் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம் ஆகும். எனவே, இது பற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு அமைப்பும் இந்த கருத்தை ஆதரிக்கின்றது. இந்த விசாரணை நடத்த உக்ரைன் அரசும், கிளர்ச்சியாளர்களும் போர் நிறுத்ததை அறிவிப்பது அவசியமாகும். விபத்து பகுதிக்குள் விசாரணை குழுவை அனுமதிக்க பட வேண்டும். அதுவரை, ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்”
“போராளிகள், தரையில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் ஏவுகணையை பயன்படுத்தி உள்ளனர். இத்தகைய அதிநவீன ஏவுகணைகளை ரஷ்யாதான், அவர்களுக்கு கொடுத்துள்ளது. அங்குள்ள சூழ்நிலையை ரஷ்ய அதிபர் புதினால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அவர் அதனை செய்ய மறுக்கிறார்.”
“இச்சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியபோது, உக்ரைன் போராளிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதால் தான், அதன் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்தேன். உக்ரைனில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும். அமெரிக்கா உலக நாடுகளுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை தொடரும்” என்று அவர் கூறியுள்ளார்.