உக்ரேன், ஜூலை 21 – எம்எச் 17 பேரிடர் நிகழ்ந்த பகுதிக்குள் பிரிவினைப் போராளிகளால் பலத்த காவலுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஓ.எஸ்.சி.இ (OSCE ) என்ற அமைப்பின் புலனாய்வுக் குழுவினரின் மூலமாக பயணிகளின் சடலங்களும், சிதிலங்களும் அப்புறப்படுத்தப்படும் பணிகள் தொடங்கியுள்ளன.
ஓஎஸ்சிஇ என்பது ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு மன்றம் எனப்படும் (Organisation of Security and Co-Operation in Europe) அமைப்பாகும்
பேரிடர் நிகழ்ந்த இடத்திற்கு அருகிலிருக்கும் டோரெஸ் என்ற ஊரின் இரயில் நிலையத்தில் குளிர்ப்பதன இரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டு, அந்தப் பெட்டிகளில் பயணிகளின் சடலங்களும், உடல்பாகங்களும் ஏற்றப்படுகின்றன.
டோரெஸ் என்னும் ஊர், டோனட்ஸ்க் என்ற உக்ரேன் நகரிலிருந்து, சுமார் 90 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு திசையில் அமைந்திருக்கின்றது.
பாதுகாப்பாக கார்கிவ் எனப்படும் மற்றொரு நகருக்கு பயணிகளின் சடலங்கள் குளிர்ப்பதன இரயில் பெட்டிகளில் மருத்துவ பரிசோதனைகளுக்காகவும், ஆய்வுப் பணிகளுக்காகவும் கொண்டு செல்லப்படுகின்றன.
கார்கிவ் என்பது பேரிடர் நிகழ்ந்த இடத்திலிருந்து 250 கிலோமீட்டர் வடக்கு திசையில் அமைந்திருக்கும் மற்றொரு உக்ரேன் நகராகும். இந்த கார்கிவ் நகர் பிரிவினை வாதப் போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து வெகு தொலைவிற்கு அப்பாற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதி – டோனட்ஸ்க் நகருக்கும் ரஷிய எல்லைப் பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசமாகும். இங்கு, உக்ரேனில் இயங்கும் ரஷிய சார்பு பிரிவினைவாத போராளிகளுக்கும், உக்ரேன் நாட்டு அரசாங்கத் துருப்புகளுக்கும் இடையே கடுமையான ஆயுத மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
சாதாரண உடைகளில் இருக்கும் புலனாய்வுக் குழுவினர், ஆயுதம் தாங்கிய போராளிகளின் மத்தியில், குளிர்ப்பதன இரயில் பெட்டிகள் திறக்கப்படுவதற்காக காத்திருக்கும் காட்சி.
புலனாய்வுக் குழுவினர் சடலங்களை, ஆவணப்படுத்தி, இரயில் பெட்டிகளில் ஏற்றுகின்றனர். ஆயதம் தாங்கிய போராளிகளின் பின்னணியில் புலனாய்வுக் குழுவினர் செயல்பட வேண்டியுள்ளது.
இரயில் பெட்டிகளுக்கு காவல் இருக்கும் ஆயுதம் தாங்கிய போராளி குழுக்கள்