அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு நீண்ட நாட்களாக புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
இதற்கு புகையிலை நிறுவனத்தின் அலட்சியம்தான் காரணம் என்று கூறி, உயிரிழந்த ஜான்சனின் மனைவி சிந்தியா ராபின்சன், எஸ்காம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை ஒரு மாதமாக நடந்தது. அப்போது சிந்தியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, ஆர்.ஜெ. ரெனால்ட்ஸ் புகையிலை நிறுவனம், நுகர்வோருக்கு தெரிவிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளது.
அத்துடன், புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, எந்தவொரு நுகர்வோருக்கும் ஆர்.ஜெ. ரெனால்ட்ஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
எனவே, புகையிலை நிறுவனங்கள், அப்பாவி மக்களின் உயிரை ஆபத்தில் கொண்டு போய் சேர்ப்பதை தடுக்கும் வகையில், இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அமையும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று வாதிட்டனர்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட ஆர்.ஜெ.ரெனால்ட்ஸ் புகையிலை நிறுவனம், பாதிக்கப்பட்ட சிந்தியா ராபின்சனுக்கு, 23.6 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாண வரலாற்றில், இவ்வளவு பெரும் தொகை இழப்பீடாக வழங்கக் கோரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது, இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.