கோலாலம்பூர், ஜூலை 22 – எண் கணித சோதிடம் என்று வந்தாலும் – ராசிகளின் அடிப்படையிலான ஜாதகம் என்றாலும், அதனை நம்புபவர்கள் – நம்பிக்கை இல்லாதவர்கள் என இரு பிரிவினர் எப்போதும் இருப்பார்கள்.
ஆனாலும், சில சம்பவங்களில் சில எண்களின் ஆதிக்கத்தை நம்மால் சுலபமாகப் புறக்கணித்துவிட முடியாது. நம்ப முடியாத அளவுக்கு எண்களின் ஆதிக்கம் அந்த சம்பவக் கோர்வைக்குள் புதைந்திருக்கும்.
எம்எச் 370 விமானம் காணாமல் போன சமயத்தில் 370ஆம் எண்ணின் ஆதிக்கத்தைக் குறிப்பிட்டு ஒரு கட்டுரையும், பின்னர் அதன் சிறப்பியல்புகளைக் குறித்து வாசகர் ஒருவரின் கட்டுரையையும் நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
எம்எச் 370 விமானத்தின் மர்ம முடிவு குறித்த தகவல்கள் இன்னும் முழுமையடையாத நிலையில் – அதற்குள் ஏற்பட்டிருக்கும் மற்றொரு பேரிடரில் சம்பந்தப்பட்டிருப்பது 17 என்ற எண்!
ஆம்! பிரிவினைவாதப் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு, 298 உயிர்களை அநியாயமாகப் பலி கொண்ட மாஸ் விமானத்தின் பயணத் தட எண் எம்எச் 17.
எம்எச் விமானப் பேரிடர் சம்பந்தப்பட்ட பல அம்சங்களில் 7ஆம் எண்ணின் சம்பந்தமும், ஆதிக்கமும் மேலோங்கி இருப்பதைக் காண முடிகின்றது.
அந்த விமானம் போயிங் 777 ரக விமானமாகும். பயணத் தட எண்ணைப் போன்றே அந்த விமான ரகத்திலும் 777 என 7ஆம் எண்களின் ஆதிக்கம் இருப்பதை நாம் காணலாம்.
விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு வீழ்ந்த நாள் ஜூலை 17 ஆகும். ஆக விமானத்தின் பயணத் தட எண்ணும் அந்த விமானம் வீழ்ந்த நாளும் ஒரே எண் – 17 – கொண்டவையாகும்.
இந்த எம்எச் 17 விமானம் இதுவரை மொத்தம் 17 ஆண்டுகள் பறந்து பணியாற்றியிருக்கிறது என்பது மற்றொரு அதிசயிக்கத்தக்க அம்சம்.
இந்த விமானம் முதன் முதலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டதும் 1997ஆம் ஆண்டில்தான். ஆண்டின் முடிவிலும் 7 வருகின்றது.
அதுவும் எந்த தேதியில் இந்த விமானம் முதன் முதலில் பறக்கத் தொடங்கியது தெரியுமா, விமானம் வீழ்த்தப்பட்ட அதே ஜூலை 17ஆம் தேதி!
ஆக, சரியாக 17 ஆண்டுகள் சேவையில் ஈடுபட்டிருந்த இந்த விமானம் தான் சேவை தொடங்கிய அதே தினத்தில் வீழ்ந்து, தன் வாழ்வை முடித்துக் கொண்டதை எண் கணித ஆதிக்கம் என்பீர்களா? அல்லது தற்செயல் என்பீர்களா?
மேலும் சில 7ஆம் எண் தொடர்புகள்
எம்எச் 17 விமானத்தின் அதிகாரபூர்வ பதிவு எண் 28411. இந்த எண்ணைக் கூட்டினால், கிடைக்கும் கூட்டு எண் (2+8+4+1+1) 16 ஆகும். இதன் கூட்டுத் தொகையும் (6+1) ஏழு ஆகும்.
ஏறத்தாழ 43,000 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த விமானம் இதுவரை பறந்துள்ளதாக மற்றொரு குறிப்பு தெரிவிக்கின்றது. 43 என்பதன் கூட்டுத் தொகையும் 7ஆகத்தான் வருகின்றது.
போயிங் விமானத்தின் 7ஆம் எண் ஆதிக்கமும் மற்ற விமான விபத்துகளும்
போயிங் 777 விமானங்கள் முதன் முதலாக வர்த்தக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது ஜூன் 7ஆம் தேதி 1995ஆம் ஆண்டில். இதுவும் 7ஆம் தேதிதான்.
அதுமட்டுமல்லாமல், இதுவரை நிகழ்ந்த மற்ற விமான விபத்துகளிலும் 7ஆம் எண்ணின் ஆதிக்கம் மேலோங்கி இருந்ததைக் காணலாம்.
முதலாவதாக, அண்மையில் காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் பயணத்தட எண்ணிலும் 7 இருந்தது. அதில் இருந்த பயணிகளின் மொத்த எண்ணிக்கை 227. (பணியாளர்கள் 12 பேர்)
மாஸ் விமானம் முதன் முதலாக விழுந்து விபத்துக்குள்ளானது 1977ஆம் ஆண்டில்தான். அந்த வருடம் டிசம்பர் 4ஆம் தேதி பினாங்கிலிருந்து கோலாலம்பூர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த 93 பயணிகளும், 7 பணியாளர்களும் உயிரிழந்தனர்.
கடந்த 37 ஆண்டுகளில் மாஸ் விமான நிறுவனத்தின் மூன்று விமான விபத்துகளில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 637 என மற்றொரு குறிப்பு தெரிவிக்கின்றது. 6+3+7 என்ற எண்களைக் கூட்டினால், 16 வருகின்றது. இதன் கூட்டுத் தொகையும் 1+6 ஏழு என்பதாகத்தான் வருகின்றது.
கொரிய விமானம் 007
இதற்கு முன்பாக எம்எச் 17 விமானத்திற்கு நேர்ந்ததைப் போன்ற இன்னொரு துயரச் சம்பவம் செப்டம்பர் 1ஆம் தேதி 1983 ஆண்டு நிகழ்ந்தது.
அப்போது கேஏஎல் 007 (KAL 007) என்ற எண் கொண்ட தென் கொரிய பயணிகள் விமானம் கட்டுப்படுத்தப்பட்ட ரஷிய ஆகாயப் பகுதிக்குள் பறந்ததாகக் கூறி, ரஷிய போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
ஆக, விமான விபத்துகளுக்கும் 7ஆம் எண்ணுக்கும் உண்மையிலேயே – எண்கணித ரீதியாகவோ, விஞ்ஞான ரீதியாகவோ தொடர்புகள் இருக்கின்றனவா? அல்லது இவையெல்லாம் தற்செயல்கள்தானா?
எண் கணித நிபுணர்களே! ஆர்வலர்களே! யாருக்காவது இது குறித்து கருத்துக்கள் இருந்தால் எழுதுங்கள் – செல்லியலில் பதிவேற்றம் செய்வோம்!
-இரா.முத்தரசன்