ஜாகர்த்தா, ஜூலை 22 – கடந்த ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற இந்தோனிசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிபர் வேட்பாளர் பிராபொவோ சுபியந்தோ தேர்தல் முடிவுகளை ஏற்காமல், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், இந்தோனிசிய தேர்தல் ஆணையம் அதிபர் தேர்தலை முறையாக நடத்தவில்லை என்றும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் நாட்டில் பதட்டம் ஏற்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய இந்தோனிசிய அதிபர் வேட்பாளர் பிரபாவோ சுபியந்தோ (படம்-மேலே) தேர்தல் முடிவுகளைத் தான் புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்தார். நாடு முழுமையிலும் பல இடங்களில் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக அவர் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடுமையாக குற்றம் சாட்டினார்.
அடுத்த இந்தோனிசிய அதிபராக வெற்றி பெற்று பதவியேற்கவிருக்கும் ஜோகோ விடோடோ தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காட்சி. பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படும் ஜோகோ ஜாகர்த்தாவின் முன்னாள் கவர்னராவார்.
மிகக் கடுமையான போராட்டத்துக்கிடையில், மிகவும் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் ஜோகோ வெற்றி பெற்றுள்ளார்.
அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பிரபொவோ சுபியந்தோ முடிவுகளை ஏற்கப் போவதில்லை என இன்று அறிவித்து விட்டு, தேர்தல் ஆணையம் மீது தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் கூறியுள்ளதை அடுத்து இந்தோனிசியாவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
காவல் துறையினரும், இராணுவத்தினரும் இந்தோனிசிய நகர்களின் தெருக்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனிசிய தேர்தல் ஆணையத்தை, பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள அரசாங்கத் துருப்புகள் காவல் காத்து வருகின்றனர்.
படங்கள் : EPA