நியூயார்க், ஜூலை 23 – எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா.வின் தீர்மானத்தை ரஷ்யா மற்றும் உக்ரைன் அரசுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பயணிகளுடன் புறப்பட்டு வந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரைனில் போராட்டக் குழுக்களால் ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த தாக்குதலில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், “விமானம் சுடப்பட்ட இடத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.
விசாரணைக் குழு சுதந்திரமாக சென்று விசாரணை நடத்த கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைன் இராணுவம் அனுமதிக்கயளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் இந்த தீர்மானத்தை உக்ரைன் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசாரணைக் குழுவினருக்கு உக்ரைன் அரசு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும்” என்று கூறியுள்ளது.
அதேபோல், இந்த சம்பவத்தில் கிளர்ச்சியாளர்களை ஆதரித்தது, ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கும் ரஷ்யாவும், ஐ.நா. தீர்மானத்தை வரவேற்று, விசாரணைக்கு உதவி செய்வதாக கூறியுள்ளது.