கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து) ஜூலை 25 – நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்த முறை சில உலக நடப்புகளினால், தனது மகிமையை, மதிப்பை இழந்து நிற்கின்றன.
காமன்வெல்த் என்பது முன்பு பிரிட்டிஷ் அரசாங்க ஆட்சியின் கீழ் ஆட்சி செய்யப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பாகும்.
ஜூலை 23ஆம் தேதி நடைபெற்ற 2014ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகளின் தொடக்கவிழாவின் போது நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் எலிசபெத் மகாராணியாரும் அவரது கணவர் பிலிப் இளவரசரும்…
இந்த நாடுகளுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டிகள் 1930ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஸ்காட்லாந்து நாட்டின் ஏற்பாட்டில் கிளாஸ்கோ நகரில் தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகள் ஏனோ இந்த தடவை எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
காரணம், ஒரு மாத காலமாக நடைபெற்று முடிந்த உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் திருவிழா போல அனைத்துலக இரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன. அந்தக் காற்பந்து போட்டிகள் முடிந்தவுடனேயே காமன்வெல்த் போட்டிகள் தொடங்கியுள்ளதால், இரவுகளெல்லாம் கண் விழித்துப் பார்த்த இரசிகர்கள், இப்போது மீண்டும் இந்தப் போட்டிகளின் மீது அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
தொடர் விமான விபத்துகள்
காமன்வெல்த் போட்டிகள் தொடங்கிய அதே தருணத்தில், மாஸ் எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தினால் – மொத்த உலகத்தின் கவனமும் அந்த சம்பவத்தின் மீது திரும்பியது.
இதனைத் தொடர்ந்து தகவல் ஊடகங்களால் பெரிது படுத்தப்பட்ட, உயிர்ப்பலியான பயணிகளின் சோகக் கதைகளினாலும் – காமன்வெல்த் போட்டிகளின் மீதான மக்களின் கவனம் திசை திரும்பியது.
எம்எச் 17 விமானத்தின் சோகக் கதைகளின் கண்ணீர் ஈரம் காய்வதற்குள்ளாகவே, தைவான் நாட்டின் விமான விபத்து, அதனை அடுத்து, ஏர் அல்ஜீரியா விமானம் விமான நிலையத் தொடர்பிலிருந்து விடுபட்டு விபத்துக்குள்ளாகியது – இப்படியாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் பல சம்பவங்கள் அடுத்தடுத்து தகவல் ஊடகங்களில் முன்னணி இடம் பெற்றதால், காமன்வெல்த் போட்டிகளின் மகிமையும் மங்கிப் போனது.
போதாக் குறைக்கு, இஸ்ரேல்-காசா பகுதிகளில் நிகழ்ந்து வரும் ஆயுதத் தாக்குதல்களில், குழந்தைகளும், சாதாரண மக்களும் நூற்றுக்கணக்கில் பலியாகி இருப்பதும், அனைத்துலக சமுதாயத்தின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துவிட்டது.
குறிப்பாக முஸ்லீம் மக்களின் புனித மாதத்தில் நடைபெறும் இந்தப் போராட்டங்கள் முஸ்லீம் மக்களின் குறைகூறலுக்கும் எதிர்ப்புகளுக்கும் இலக்காகியுள்ளன.
உலகின் நான்காவது பெரிய போட்டி விளையாட்டுகள்
இவ்வாறாக, அனைத்துல அரங்கில் அடுக்கடுக்காக நிகழ்ந்து வரும் தொடர் சம்பவங்களினால் காமன்வெல்த் போட்டிகள் தனது கவர்ச்சியை இழந்தாலும்,
இது உலகின் நான்காவது பெரிய விளையாட்டுப் போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் 1930ஆம் ஆண்டில் திடல் போட்டிகளை மட்டுமே கொண்டு ஆரம்பிக்கப்பட்ட காமன்வெல்த் போட்டிகள், இரண்டாம் உலகப் போரின்போது, 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் இரண்டு தடவைகள் நடத்தப்படவில்லை.
இதுவரை 7 நாடுகளில் 18 நகரங்களில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு முந்தைய 2010ஆம் ஆண்டுக்கான போட்டிகள் இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்றன.
காமன்வெல்த் கூட்டமைப்பின் உறுப்பிய நாடுகளின் எண்ணிக்கை 53தான் என்றாலும், ஏறத்தாழ 71 பிரதேசங்கள் இந்தப் போட்டிகளில், தங்களின் சொந்த கொடிகளுடன் பங்கு பெறுகின்றன.
குறிப்பாக பிரிட்டன் ஒரே நாடாக அல்லாமல், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து என தனித் தனி பிரிவுகளில் இந்தப் போட்டிகளில் பங்கு பெறுகின்றன.
இதுவரை ஆறு நாடுகள் மட்டுமே எல்லா காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கு பெற்றிருக்கின்றன.
ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகியவையே அந்த ஆறு நாடுகளாகும்.
இதுவரை ஆஸ்திரேலியா மட்டும் இந்த போட்டிகளில் 12 முறை முதல் இடத்தைப்பிடித்து சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-இரா.முத்தரசன்