தனுஷ் நடிப்பில் வெளிவந்த மயக்கம் என்ன, ‘3’, மரியான், நய்யாண்டி, என தொடர்ச்சியாக நான்கு படங்கள் எதிர்பார்த்தபடி ஓடாமல் தோல்வியைத் தழுவின என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால்,தனது தோல்விகளிலிருந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியாக, தனுஷின் சாமர்த்தியமான புத்திசாலித்தனமான, வியாபார நுணுக்கத்தால், இன்றைக்கு தனுஷூம், விநியோகஸ்தர்களும் ஏகபோக மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
சிவகார்த்திகேயன் படத்துடன் இணைத்து விற்பனை
சிவகார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த துரை செந்தில்குமார்தான் ‘டாணா’ என்ற போலீஸ் பின்னணியில் உருவாகும் படத்தை இயக்கி வருகின்றார். இதன் காரணமாக டாணா படத்திற்கு விநியோகஸ்தர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
இந்த சூழ்நிலையில் தனது வேலையில்லா பட்டதாரி படத்தை வாங்குபவர்களுக்குத்தான் டாணா படத்தின் விநியோக உரிமையும் சேர்த்து வழங்கப்படும் என்ற நிபந்தனையோடு தனுஷ் தனது வியாபார நுணுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு படங்களுமே அவரது தயாரிப்புதான் என்பதால், அவரால் இந்த நிபந்தனையை விதிக்க முடிந்திருக்கின்றது.
அதிலும், வேலையில்லா பட்டதாரி படத்தை விலை குறைவாக ஏறத்தாழ 8 கோடி ரூபாய்க்கும், டாணா படத்தை விலை அதிகமாகவும் கணக்கிட்டு, இரண்டு படங்களையும் சேர்த்து, ஏறத்தாழ 24 கோடி ரூபாய்க்கு தனுஷ் சாமர்த்தியமாக, தனது வொண்டர்பார் நிறுவனத்தின் மூலமாக தமிழக உரிமைகளை விற்பனை செய்திருக்கின்றார்.
விநியோகஸ்தர்களும், தனுஷ் படம் சரியாகப் போகாவிட்டாலும் பரவாயில்லை, சிவகார்த்திகேயன் படத்தில் போட்டதை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு இரண்டு படங்களையும் துணிந்து ஒருசேர எடுத்திருக்கின்றனர்.
இரண்டு படங்களினாலும் இனி இலாபம்தான்
தனுஷூம் இரண்டு படங்களையும் ஒரேயடியாக சேர்த்து நல்ல விலைக்கு விற்று இலாபம் பார்த்த மகிழ்ச்சியில் திளைத்து வந்தார்.
அடுத்து வருவதுதான் சுவாரசியான உச்சகட்டம்.
வேலையில்லா பட்டதாரி எதிர்பாராத விதமாக ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்று தற்போது தமிழகத்தில் நன்றாக ஓடுகின்றது. இதன் காரணமாக, விநியோகஸ்தர்கள் தாங்கள் இரண்டு படங்களுக்கும் சேர்த்துப் போட்ட பணத்தை வேலையில்லா பட்டதாரி ஒரு படத்திலேயே இலாபத்தோடு எடுத்துவிடுவார்கள் என தமிழக சினிமாவின் வணிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால், அடுத்து வரும் சிவகார்த்திகேயனின் ‘டாணா’ படம் எவ்வளவுதான் வசூல்தான் செய்தாலும் அது விநியோகஸ்தர்களுக்கு போனஸ் போல கூடுதல் வருமானம்தான். காரணம் இரண்டு படங்களுக்குமான முதலீட்டையும், இலாபத்தையும் அவர்கள் வேலையில்லா பட்டதாரி ஒரு படத்திலேயே பார்த்து விடுவார்கள்.
அதிலும் டாணாவும் நன்றாக ஓடி விட்டால், கேட்கவே வேண்டியதில்லை. விநியோகஸ்தர்களுக்கும் – தனுஷூக்கும் ஒரே வசூல் மழை கொண்டாட்டமாக இருக்கும்.