Home நாடு இந்து மதத்தை இழிவுபடுத்தும் பேச்சு: சாஹுல் ஹமீட்டுக்கு எதிராக பிரிக்பீல்ட்ஸில் போராட்டம்!

இந்து மதத்தை இழிவுபடுத்தும் பேச்சு: சாஹுல் ஹமீட்டுக்கு எதிராக பிரிக்பீல்ட்ஸில் போராட்டம்!

768
0
SHARE
Ad

Ustazகோலாலம்பூர், ஜூலை 30 – இந்து சமயத்தை இழிவு படுத்துவது போல் கருத்துரைத்த இஸ்லாமிய மத போதகர் உஸ்தாஜ் சாஹுல் ஹமீட் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தை மஇகா இளைஞர் பிரிவு மற்றும் பல்வேறு அரசு சாரா இயக்கங்கள் ஏற்பாடு செய்தன.

இதில் மஇகா உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன், முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் டி.மோகன் உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்து சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த சாஹுல் ஹமீட், உண்மையில் பாஸ் கட்சியின் உறுப்பினரா? அது உண்மை என்றால், பாஸ் கட்சி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாஹுல் ஹமீட், அழகப்பாஸ், பாபாஸ் போன்ற சாம்பார் பொடி தயாரிக்கும் இந்து நிறுவனங்களிடம் இருந்து இஸ்லாம் மக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறிய காணொளி கடந்த வாரம் நட்பு ஊடகங்களில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், அந்த காணொளியில் சாஹூல் ஹமீட், பெர்மாத்தாங் பாவ் அருகேயுள்ள அழகப்பாஸ் நிறுவனத்திற்கு முன் நாக்கு வெளியே நீட்டிய படி இந்து கடவுள் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், காரணம் தயாரிக்கப்படும் எல்லா மசாலா பொடிகளையும் கடவுள் சுவைத்த பின்னரே விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சாஹுல் ஹமீடின் இந்த பேச்சைக் கேட்ட மலேசிய இந்தியர்கள், அவருக்கு எதிராக பேஸ்புக்கில் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பது போன்ற காணொளி ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்ட சாஹுல் ஹமீட், தான் இந்த கருத்துக்களை பொதுவில் கூறவில்லை என்றும், தனது பேச்சை காணொளியாக வெளியிட வேண்டும் என்றும் நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

எனினும், சாஹுல் ஹமீட்டின் கருத்துக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்தியர்கள் இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பினாங்கில் சாஹுல் ஹமீட் வீட்டின் முன்பு மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்றும் சரவணன் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, முன்னாள் பெர்காசா துணைத்தலைவர் சுல்கிப்ளி நோர்டின் இந்து சமயம் குறித்து இழிவுபடுத்துவது போல் கருத்துரைத்தார். அவரது கருத்துக்கு எதிராக மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

13 -வது பொதுத்தேர்தலில் ஷா ஆலம் நாடாளுமன்ற தொகுதியில், தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்ட சுல்கிப்ளி தோல்வியைத் தழுவினார்.

இதுவரை சாஹுல் ஹமீட்டுக்கு எதிராக காவல்துறையில் 400 புகார்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் குறிப்பிட்டனர்.