கோலாலம்பூர், ஜூலை 31 – நாட்டின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான மலாயன் வங்கி, கடன் அட்டைகளின் மூலமாக நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளை 11 சதவீதம் அதிகரிக்க புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
கடந்த புதன் கிழமை, மலாயன் வங்கி தங்களின் முதல் ‘விசா சிக்னேச்சர் கடன் அட்டைகள்’ ( Visa Signature credit cards)-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த கடன் அட்டைகள், வாடிக்கையாளர்களுக்கு, தினசரி அடிப்படையில் ‘கேஸ் பேக்’ (Cash Back) சலுகைகளை வழங்குகின்றன. மேலும், ட்ரீட் புள்ளிகளைப் பணமாக மாற்றும் வசதியும் இந்த புதிய கடன் அட்டைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மலாயன் வங்கியில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசா சிக்னேச்சர் கடன் அட்டைகள் மூலம் இந்தாண்டு இறுதிக்குள், இதற்கான பணப் பரிவர்தனைகள் 21.3 பில்லியன் ரிங்கிட்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது பற்றி மலாயன் வங்கியின் வாடிக்கையாளர்களுகான நிதி சேவைப் பிரிவின் தலைவர் கமிருல்லா பூர்கன் கூறுகையில், ” இந்த வருட இறுதிக்குள் சுமார் 20,000 விசா சிக்னேச்சர் கடன் அட்டைகள் வங்கியின் வாடிகையளர்களிடம் வழங்கப்படும். கடன் அட்டைகளைப் பெரும் வாடிக்கையாளர்களின் ஆண்டு வருமானம் 100,000 ரிங்கிட்களிலிருந்து 180,000 ரிங்கிட்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அடிப்படை நிபந்தனை ஆகும்.”
“வாடிக்கையாளர்களின் கடன் அட்டைகள் குறித்த தேவைகள் மற்றும் கண்ணோட்டங்களை ஆராய்ந்து பல புதிய வசதிகளை இந்த விசா சிக்னேச்சர் கடன் அட்டைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விசா சிக்னேச்சர் கடன் அட்டைகளை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், முதல் வருடத்திற்கான கட்டணம் தள்ளுபடி, 250 ட்ரீட் புள்ளிகளுக்கு ஒரு ரிங்கிட் போன்ற பல்வேறு சலுகைகளை மலையன் வங்கி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.