கோலாலம்பூர் – “ஆங்கிலச் சேனல்களைப் பார்பதை விட மலேசியர்கள் தாய்மொழி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அதிக ஆர்வமாக இருப்பதால் மலேசியத் தொலைக்காட்சித் துறையில், நெட்பிலிக்ஸ் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என மலாயன் வங்கி ஆராய்ச்சி ஒன்றின் மூலம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மலாயன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது (நெட்பிலிக்ஸ்) மலேசியத் தொலைக்காட்சித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எங்களுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. முதலில், மலேசியர்கள் தாய்மொழி நிகழ்ச்சிகளை பார்ப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.”
“இரண்டாவது, வழக்கமான கட்டணத் தொலைக்காட்சிகளைக் காட்டிலும் நெட்பிலிக்சின் கட்டணம் மிக அதிகம். மூன்றாவது, நேரடி நிகழ்ச்சிகளுக்கு நெட்பிலிக்சில் தொடர்ந்து தேவை இருந்து வருகிறது. அதேபோல், பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது தயாரிப்புகளை தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருவது அதிகரித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 7-ம் தேதி மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நெட்பிலிக்ஸ், ‘நேரலை’ முறையில் வீடியோ ஸ்ட்ரீமிங் தொழில்நுட்பம் மூலம் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகிறது.
நெட்பிலிக்சைப் பொருத்தவரை, மலேசியாவிற்கான மாதாந்திரக் கட்டண திட்டத்தின் படி, அடிப்படை நிகழ்ச்சிகளை 33 ரிங்கிட்டிலும், நடுத்தரப் பிரிவு நிகழ்ச்சிகளை 42 ரிங்கிட்டிலும், முதன்மை நிகழ்ச்சிகளை 51 ரிங்கிட்டிலும் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.