கோலாலம்பூர் – முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு கைக்கூலியாக தான் செயல்படவில்லை என சரவாக் ரிப்போர்ட் பத்திரிக்கையின் ஆசிரியர் கிளேர் ரீகேஸ்டில் பிரவுன் தெரிவித்துள்ளார்.
அன்வாருடன் நெருங்கிய தொடர்பில் ரீகேஸ்டில் பிரவுன் இருப்பதாக ஓசிஐ (Open Source Investigations) என்ற இணையதளம் தெரிவித்திருப்பதை அவர் மறுத்துள்ளார்.
“நான் ஒரு பத்திரிக்கையாளர். அதனால் அன்வார் உட்பட மற்ற அரசியல் தலைவர்களை அணுக முடியும். ஊழலுக்கு எதிராகவும், மலேசியாவில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்திருக்கிறேன். அதில் அவரே (அன்வார்) பாதிக்கப்பட்டிருக்கிறார்.”
“நான் மலேசிய எதிரணியிடமிருந்து பணம் வாங்கியிருக்கிறேன் என்று நீங்கள் எண்ணினால், அதற்கு எனது பதில் ‘இல்லை’ என்பது தான்” என ரீகேஸ்டில் பிரவுன் மலேசியாகினி இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.