Home இந்தியா இலங்கையில் நடப்பது ஹிட்லர் ஆட்சி- ஜெயலலிதா

இலங்கையில் நடப்பது ஹிட்லர் ஆட்சி- ஜெயலலிதா

620
0
SHARE
Ad

jeyaசென்னை, பிப். 21- இலங்கையில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது, ஹிட்லர் ஆட்சி நினைவுக்கு வருவதாக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:-

#TamilSchoolmychoice

12 வயது சிறுவன் பாலசந்திரன் ஈவு இரக்கமின்றி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாலசந்திரனுக்கு 12 வயதுதான் ஆகியிருந்தது. அவன் ஒரு குழந்தை. அந்தக் குழந்தை எந்தவித குற்றமும் புரியவில்லை.

ஆனால், அந்தக் குழந்தையை ராணுவம் சுட்டுத் தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. இந்த ஆதாரங்களையும், இன்னும் பல தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களையும் பார்க்கும்போது இப்போதுள்ள இலங்கை அரசின் தன்மையும், மனப்பான்மையும், எண்ணமும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது.

இந்த செய்திகளைப் பார்க்கும்போது முன்பு ஜெர்மனி நாட்டில் நாஜிகளின் ஆட்சி நடைபெற்றபோது, ஹிட்லரின் ஆட்சியின் போது என்ன நடந்ததோ அது நினைவுக்கு வருகிறது.

ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதைப் போலவே, இன்றைய இலங்கை அரசு, தமிழர்களை வேட்டையாடுகிறது. அவர்களை அழிக்கிறது.

மத்திய அரசுக்கு வேண்டுகோள்: இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை மத்திய அரசு கவனத்தில் கொண்டு அவற்றுக்குக் காரணமானவர்களுக்கு தக்க தண்டனை வழங்க தீர்மானம் இயற்றி அதை ஐ.நா. சபையில் கொண்டு வர வேண்டும்.

மேலும், மத்திய அரசு அமெரிக்காவுடனும், இன்னும் சில நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். வர்த்தக ரீதியான பொருளாதார ரீதியான தடைகளை விதிக்க வேண்டும்.

இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கே செல்ல அனுமதிக்கப்பட்டு அங்கேயே வாழ்க்கை நடத்த அனுமதிக்கப்படும் வரை, சிங்களர்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தையும் தமிழர்களுக்கும் வழங்கும் வரை, அவர்கள் கண்ணியத்துடன் அங்கே வாழுகின்ற காலம் வரை இந்தப் பொருளாதாரத் தடை நீடிக்க வேண்டும்.

மன்னிக்க முடியாத போர்க்குற்றம்: 12 வயது பாலசந்திரன் கொல்லப்பட்டது மிகப்பெரிய மன்னிக்க முடியாத போர்க்குற்றமாகும். இதற்கு இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டும். இத்தகைய போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி அவர்கள் செய்த போர்க்குற்றங்களுக்கான விசாரணையைச் சந்தித்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.